இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், தனது பயிற்சியாளர் குழுவில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸியை சேர்க்க விரும்பியிருந்தார். இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றியவர்கள் என்பதால், ஹஸ்ஸி இங்கிலாந்து அணியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, அடுத்த ஆஷஸ் தொடருக்கு முன்னதாக ஹஸ்ஸியின் அனுபவம் இங்கிலாந்து பேட்டிங் துறைக்கு உதவும் என ஃப்ளெமிங் கருதியதாக கூறப்பட்டது.
ஆனால், இங்கிலாந்தின் முழுநேர பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க ஹஸ்ஸி தற்போது மறுத்துள்ளார். அதற்குப் பதிலாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் பகுதி நேர ஆலோசகராக பணியாற்ற அவர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து செயல்படுவதுடன், தி ஹண்ட்ரெட், மற்ற டி20 லீக்குகள் மற்றும் தொலைக்காட்சி வர்ணனை போன்ற தனது பணிகளையும் ஹஸ்ஸி தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.
ஹஸ்ஸியின் இந்த முடிவு அடுத்த ஆஷஸ் தொடரை எதிர்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹஸ்ஸியை தனது பயிற்சியாளர் குழுவில் சேர்க்க நினைத்த ஃப்ளெமிங்கிற்கு இது பின்னடைவாக அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு தற்போது வேறு வாய்ப்புகளை அந்த அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






