அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் ஹைபிரிட் மாடலில் போட்டி நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஐசிசி ஒரு முக்கிய முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் விளையாடுகிறது. ஆனால் இந்திய அணி பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அனைவரும் இந்திய அணி விளையாட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இருப்பினும் இந்திய அணி தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்த சூழ்நிலையில் இதற்கு ஒரு முடிவு காணும் விதமாக ஐசிசி இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியது. அதில் ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும், இதுவே இறுதியான முடிவு என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐசிசி திட்டவட்ட மறுப்பு
அதாவது இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் வெளியிடத்திலும் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானிலும் நடத்துவதே ஒரே வழி ஐசிசி கூறியதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதன் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நாளை மீண்டும் மற்றொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சின்ன வயசுல 2 விஷயம் ரொம்ப ஆபத்து.. பிரித்விஷா இப்போ முழிச்சுக்கணும் – முன்னாள் டெல்லி உதவி கோச் பேட்டி
இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் எனவும் எனவே போட்டிகள் ஹைபிரிட் மாடலில் மட்டுமே நடத்தப்படும் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்திய அணி விளையாடும் போட்டிகள் ஒரு அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி வெளியே நடைபெறும் என்று தெரிகிறது. கடந்த முறை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 11ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை வெளியிட்டது. இந்த சூழ்நிலையில் போட்டிகள் தற்போது வெளியே மாற்றப்படுவதால் அதன் இறுதி அட்டவணையை இன்னும் சில தினங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.