இன்று ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் ஆர்சிபி அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது அல்லது முதல் இடத்திற்கு முன்னேற முடியும் என்கின்ற சூழ்நிலையில் ஆர்சிபி அணி களம் இறங்கியது. இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நொறுக்கி தள்ளிய ரிஷப் பண்ட்
முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணிக்கு மிட்சல் மார்ஸ் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 67 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடரில் இரண்டாவது சதத்தை அடித்து 61 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 118 ரன்கள் குவித்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது.
இந்த மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் 19 பந்தில் 30 ரன், விராட் கோலி 30 பந்தில் 54 ரன், கேப்டன் ரஜத் பட்டிதார் 7 பந்தில் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 11.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
ஜிதேஷ் சர்மா மேஜிக்
இந்த நிலையில் ஆறாவது இடத்தில் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா துவக்க முதல் அதிரடியில் ஈடுபட்டு அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் லக்னோ கையில் இருந்த போட்டியை ஒவ்வொரு ஓவர்களாக மெது மெதுவாக ஆர்சிபி அணியின் பக்கம் கொண்டு வந்து 20 பந்தில் அரை சதம் அடித்தார்.
இதைத் தொடர்ந்து இறுதி வரை களத்தில் நின்று வெறும் 33 பந்தில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 85 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய மயங்க் அகர்வால் ஆட்டம் இழக்காமல் 23 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். முடிவில் ஆர்சிபி அணி 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து பஞ்சாப் அணிக்கு எதிராக முதல் தகுதி சுற்றில் நாளை மறுநாள் விளையாடுகிறது.
இதையும் படிங்க : 61 பந்து 118 ரன்.. அதிரடி சதத்துடன் பல்டி அடித்த ரிஷப் பண்ட்.. லக்னோவில் மாஸ் ரெக்கார்டு.. ஆர்சிபி பரிதாபம்
ஐபிஎல் வரலாற்றில் 2010 ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 204 ரங்களை ஆர்சிபி சேஸ் செய்ததே அதனுடைய அதிகபட்சமாக இருந்தது. இன்று அதை முறியடித்து 228 ரன்களை துரத்தி இருக்கிறது. மேலும் ரிஷப் பண்ட் இதுவரை ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்துள்ள இரண்டு போட்டிகளும் அவர் விளையாடிய அணி தோல்வி அடைந்திருப்பது வினோதமாக அமைந்திருக்கிறது!






