ஆர்.சி.பி தொடர்ந்து நான்காவது படுதோல்வி; பெண்களை ஐபிஎல் தொடரிலும் தொடரும் சோகம்!

0
97
WPL

பெண்கள் ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டி இன்று மும்பை ப்ராபோன் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. துவக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்ருதி மந்தனா, நியூசிலாந்தின் சோபி டிவைன் இருவரும் களம் கண்டனர்!

- Advertisement -

சோபி டிவைன் மிக அதிரடியாக விளையாட, அவருக்கு ஒத்துழைப்பு தருவதற்கு பதிலாக தானும் அதிரடிக்கு சென்ற கேப்டன் மந்தனா பரிதாபமாக ஆட்டம் இழந்து வெளியேறினார். இதற்குப் பிறகு சோபி டிவைன் உடன் ஜோடி சேர்ந்த ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் எலிஸ் பெரி இருவரும் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார்கள்.

பெங்களூர் அணியின் ரன் உயர்வு நம்பிக்கை அளிக்கும் விதமாக அதிரடியாக உயர ஆரம்பித்தது. இந்த முக்கியமான கட்டத்தில் சோபி டிவைன் 24 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து பெங்களூர் அணியின் சரிவும் ஆரம்பித்தது.

இதற்குப் பிறகு பெங்களூர் அணியின் எந்த ஒரு வீராங்கனையும் 15 ரன்னை தாண்டவில்லை. வருவதும் போவதும் ஆகவே இருந்தனர். அந்த அணியின் நம்பிக்கையாக விளையாடிக் கொண்டிருந்த பெரி 39 பந்தில் ஆறு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்து வெளியேற, பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உத்தரப்பிரதேச அணியின் சோபி எக்லஸ்டன் 3.3 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணியின் துவக்க வீராங்கனைகள் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரான, உத்தரப்பிரதேச அணியின் கேப்டன் அலிசா ஹீலி மற்றும் தேவிகா வைத்யா இருவரும் வெறும் 13 ஓவரில் 139 ரன்களை எட்டி உத்திர பிரதேசம் அணியை அபார வெற்றி பெற வைத்தனர்!

ஒரு முனையில் தேவிகா வைத்யா ஐந்து பௌண்டரிகளுடன் 31 பந்தில் 36 ரன்கள் என பொறுமையாக அலிசா ஹீலிக்கு கம்பெனி தர, இன்னொரு முனையில் அலிசா ஹீலி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். 47 பந்துகளை சந்தித்த அவர் 18 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 96 ரன்கள் எடுத்து மிரட்டினார். இந்தத் தொடரில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்சம் இதுதான்!

நான்காவது போட்டியில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். நான்காவது போட்டியில் விளையாடிய உத்தர பிரதேச அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். மொத்தம் எட்டு போட்டிகள் ஒரு அணிக்கு கிடைக்கும் என்கின்ற நிலையில், ரன் ரேட்டில் மிக மோசமான நிலையில் இருக்கும் பெங்களூர் அணி ஏறக்குறைய முதல் அணியாக பிளே ஆப்ஸ் வாய்ப்பை விட்டு வெளியேறிவிட்டது என்றே கூறலாம்!