பிரான்சிசைஸ் டி20 லீக்கில் 16 வருடங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்கள் அணியால் வெல்ல முடியாத கோப்பையை, டபிள்யுபிஎல் தொடரில் இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணியினர் வென்று சாதித்து அசத்தி இருக்கிறார்கள்.
இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பந்து வீசி அந்த அணியை 113 ரன்களுக்கு சுருட்டியது.
இதற்கடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை எந்த சூழ்நிலையிலும் விட்டு விடக்கூடாது என எச்சரிக்கையாக பொறுமையாக விளையாடி, இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 19.3 ஓவரில் இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சமூக வலைதளத்தில் தொடர்ந்து கேலி கிண்டல்களுக்கு ஆளாகி வந்த ஆர்சிபி அணிகளின் ரசிகர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்பதால் பெங்களூரு தெருக்களில் மிகப்பெரிய அளவில் குதூகலமாக இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வெற்றி ஆர்சிபி அணிக்கானமிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் அணி வெற்றி பெற்ற உடனே, அணி நிர்வாகியை வீடியோ கால் மூலம் அழைத்த விராட் கோலி மகளிர் அணியினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். இன்றைய நாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு மிகச் சிறப்பானதாக அமைந்திருக்கிறது.
சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசும்பொழுது “உணர்வு இன்னும் குறையவில்லை. ஒரு விஷயத்தை நான் உறுதியாக சொல்வேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எங்களுக்கு இந்த தொடரில் பெங்களூரில் போட்டிகள் நல்லவிதமாக சென்றது. டெல்லிக்கு வந்ததும் நாங்கள் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து தோற்றோம். எனவே நாங்கள் சரியான நேரத்தில் மீள வேண்டும் என்று பேசினோம். கடந்த ஆண்டு தோல்வி எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தது.
இதையும் படிங்க : WPL ஆர்சிபி சாம்பியன்.. உடனே வீடியோ காலில் வந்த விராட் கோலி.. மைதானத்தில் செம சம்பவம்
மேலும் அணி நிர்வாகம் எங்களை இது உங்கள் அணி நீங்கள் உருவாக்குங்கள் என்று கூறியது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தகோப்பையை நான் வெல்லவில்லை. அணியினர் நாங்கள் எல்லோரும் சேர்ந்து வென்று இருக்கிறோம். என்னுடைய தாய் கன்னடம் இல்லை ஆனால் விசுவாசம் மிக்க ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கூறுகிறேன். ஆண்டுதோறும் ஈ சாலா கப் நமதே என்று கூறுவோம். இந்த முறை சொல்லுங்கள் ஈ சாலா கப் நம்து” என்று கூறியிருக்கிறார்.