இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யாருடைய அறிவுரையும் தேவைப்படாது என, அவருடைய சுழல் பந்துவீச்சு கூட்டணியாளர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்பொழுது இரண்டாவது இன்னிங்ஸில் 308 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருக்கிறது.
பத்து டெஸ்டுக்கு அடித்தளம் போட்ட ஜோடி
இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. எனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாட இருக்கும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இப்படியான நிலையில் தான் எதிர்பார்க்காத வகையில் முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு இந்திய அணி முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்தது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் சேர்ந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை காப்பாற்றினார்கள். இது ஒரு போட்டிக்கு மட்டும் அல்லாமல் அடுத்த ஒன்பது போட்டிக்கும் சேர்த்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக மாறி இருக்கிறது.
அஸ்வினுக்கு அறிவுரை தேவையில்லை
இந்த நிலையில் அஸ்வின் பற்றி பேசி இருக்கும் ஜடேஜா கூறும்பொழுது “அஸ்வினுக்கு யாருடைய அறிவுரைகளும் தேவைப்படாது. நான் அவரிடம் மிகவும் சாதாரணமாக சொன்னது என்னவென்றால் ‘ நாமாக எந்த தவறும் செய்ய வேண்டாம். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக மாறி இருக்கிறது. எனவே நாம் நல்ல முறையில் பேட்டிங் செய்வோம்’ என்று சொன்னேன்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் அணி ஃபாலோ-ஆன் ஆகியும்.. இந்திய அணி கொடுக்காதது ஏன்?.. பக்கா பிளானில் ரோகித் கம்பீர்
“மேலும் நான் அஸ்வினிடம் பேசும் பொழுது ‘நாம் சிங்கிள்கள் எடுத்த முயற்சி செய்யலாம். கடினமாக ஓடி வெயிலில் இரண்டு ரன்கள் ஏதும் எடுக்க வேண்டாம்”என்று சொன்னேன். அவர் தன்னுடைய சொந்த மைதானத்தில் மிகச் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து அற்புதமான இன்னிங்ஸ் விளையாடி இருக்கிறார். மேலும் இந்த ஆடுகளத்தில் ஒரு சில பந்துகள் பவுன்ஸ் ஆகின்றன, ஒரு சில பந்துகள் திரும்பவும் செய்கின்றன. எனவே இது எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.