இந்த மாதம் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி எப்படியான அணுகு முறையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய பேட்டிங் ஜாம்பவான் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் மோசமாக இருக்கிறது. மேலும் இறுதியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் மோசமாகவே இருந்தது. இவருடைய பேட்டிங் பார்ம்தான் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல முடியுமா? என்பதை உறுதி செய்யக்கூடிய முக்கிய காரணியாகவும் அமைந்திருக்கிறது.
பெரிய தொடர்களின் கதாநாயகன்
தற்போது பேட்டிங் ஃபார்ம் சரியில்லாமல் இருந்தாலும் கூட விராட் கோலி பெரிய தொடர்கள் வரும்பொழுது சிறப்பாக செயல்படக்கூடிய பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக உலகச் சாதனையும் படைத்திருந்தார். அவருடைய கடந்த கால செயல்பாடுகள் நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.
மேலும் மிக முக்கியமாக விராட் கோலிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மிகவும் உகந்த ஒன்றாக இருக்கிறது. அவர் இந்த வடிவத்தில் செய்துள்ள பல்வேறு சாதனைகள் அவருக்கு இந்த வடிவம் எந்த அளவிற்கு வசதியானது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன. இருந்த போதிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மிக முக்கிய அறிவுரை ஒன்றை விராட் கோலிக்கு கூறி இருக்கிறார்.
விராட் கோலி இதை செய்ய வேண்டும்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரிங்கு சிங் செய்த ரோலை விராட் கோலி உணர வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். மேலே ஆக்ரோஷமான பேட்டிங் செய்வதற்கும் கீழே போட்டியை ஆக்ரோஷமாக விளையாடி முடிப்பதற்கும் நடுவில் விராட் கோலி பாலமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது”
“விராட் கோலி தன்னுடைய வழக்கமான பாணியில் விளையாட வேண்டும். அவர் தன் பலத்தை புரிந்து கொள்ள வேண்டும். அவர் பார்முக்கு வந்து விட்டால் இந்திய அணிக்கு அதைவிட பெரிதாக எதுவும் இருக்க முடியாது. அவர் தன்னுடைய ஆட்டத்தை மாற்றிக்கொள்ள தேவையில்லை. 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் அவசரப்பட்டு விளையாட வேண்டிய அவசியமும் இல்லை”
இதையும் படிங்க : இது பாகிஸ்தான் அணியா 13 வயசு பசங்க அணியா?.. திருமண மண்டபம் மாதிரி மைதானம் – பசித் அலி விமர்சனம்
“2023ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர இரண்டிலும் ரோகித் சர்மா செயல்பட்ட விதத்தை வைத்து பார்க்கும் பொழுது, அவருக்கு இந்த முறையும் எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன். மாறிவரும் கிரிக்கெட்டுக்கு தகுந்தபடி அணியை வழிநடத்திய ரோகித் சர்மா தன்னுடைய அதிரடியான டெம்ப்ளெட்டில் இருந்து மாற மாட்டார் என்று தோன்றுகிறது” எனக் கூறியிருக்கிறார்.