நேற்று மும்பை மெரின் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய வீரர்களின் வெற்றி கொண்டாட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்க்கும் பொழுது அது இதயத்தை நிறைப்பதாக இருப்பதாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
இந்திய அணி இறுதியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரையும், 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று இருந்தது. இதற்குப் பிறகு உலகக் கோப்பை மற்றும் ஐசிசி தொடர்கள் என எதையும் இந்திய அணி வெல்லவில்லை. இதன் காரணமாக நிறைய விமர்சனங்கள் இந்திய அணியை சுற்றி இருந்தன.
தற்போது இதையெல்லாம் முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வென்று உலகக்கோப்பையை உயர்த்தியது. இது ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என இரண்டு பெரிய வெற்றிகளில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த வெற்றிகளின் போது இருந்ததை விட, தற்போதைய உலகக் கோப்பை வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நேற்று மும்பையில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பார்க்கும் பொழுது என் இதயம் நிறைகிறது. இந்த தேசம் விளையாட்டிற்கு கொடுத்திருக்கிறது மற்றும் கொடுத்துக் கொண்டு வருகிறது. மீண்டும் ஒருமுறை சாம்பியனாகி பெருமைப்படுகிறோம்.
இதையும் படிங்க : சூர்யா கேட்ச் பக்கா.. நீங்க உங்க டீம் செய்த 10 பிராடு வேலைகளை கவனிங்க – ஆஸி பத்திரிக்கைக்கு கவாஸ்கர் பதிலடி
என்னால் இவற்றை நம்ப முடியவில்லை. நான் பல காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன். 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன் டிராபி என பெரிய வெற்றிகள் பெற்ற அணியில் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த உலகக் கோப்பையை வென்ற பிறகு வீரர்கள் உணர்ச்சிவசப்பட்ட விதம் வெற்றிக்கான அர்த்தத்தை கூறியது. 2007ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக ராகுல் டிராவிட் முதல் சுற்றில் வெளியேறினார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உலகக் கோப்பை வெற்றிகளை நெருங்கி தவற விட்டார்கள். தற்பொழுது எல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.