இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் திடீரென்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் சமூக வலைதளத்தில் ரோகித் சர்மாவின் ரசிகரிடம் அஸ்வின் கடிந்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அஸ்வினுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சிறந்த வீரராக வலம் வந்தார். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த அஸ்வின் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய ஜாம்பவானாக திகழ்ந்தார். இந்த நிலையில் அவரது பந்துவீச்சு சமீபத்திய சில தொடர்களில் இறக்கத்தை சந்தித்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உள்ளே கொண்டு வரப்பட, இதனை அறிந்த அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் பாதியில் திடீரென்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டாலும் அவரது முடிவுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தது. இந்த சூழ்நிலையில் அஸ்வினுக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மாவிற்கு நன்றி சொல்லுங்கள்
இந்த சூழ்நிலையில் சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அஸ்வின், பத்மஸ்ரீ விருது பெற்ற நிலையில் ரசிகர் ஒருவர் வாழ்த்துக்கள் கூற, அதற்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும் மற்றொரு ரோகித் சர்மாவின் ரசிகர் “நீங்கள் நன்றி சொல்ல விரும்பினால் ரோகித் சர்மா உங்களுக்கு வழங்கிய வாய்ப்புகளுக்காக நன்றி சொல்லுங்கள்” என்று கூறினார். இது அஸ்வினுக்கு சிறிது எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க:4வது ஸ்டம்ப் லைனில் பந்து வீச சொல்லி கோலி சொன்னாரா? டெல்லி வீரரின் சுவாரசிய பதில்.. ரஞ்சி டிராபி 2025
இதை கவனித்த அஸ்வின் “டேய் பைத்தியம்” என்று பதில் அளித்தார். அதாவது அஸ்வின் 2010 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு விராட் கோலி தலைமையிலும், அதற்குப் பின்னர் தான் ரோஹித் சர்மாவின் தலைமையிலும் விளையாடி இருக்கிறார். மூன்று விதமான கேப்டன்களின் கீழ் அஸ்வின் விளையாடி இருக்கும் நிலையில் இதனை அறியாத அந்த ரசிகர் ரோகித் சர்மா தான் அவருக்கு வாய்ப்புகளை வழங்கினார் என்று கூற, அந்த விஷயம் தான் அஸ்வினுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.






