பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்தை எறிகிறார் என சமூக வலைதளங்களில் நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை கூறியிருக்கிறார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் விளையாட வைக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் அவர் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பந்துவீச்சில் பிரச்சனை என்ன?
உஸ்மான் தாரிக் பந்துவீச்சில் அவரது கை நேராக வராமல் பக்கவாட்டில் இருந்து வருகிறது. இதைவிட முக்கியமாக அவர் கிரீசில் இரண்டு நொடிகளுக்கு மேல் நின்று பேஸ்ட்மேன் நகர்வதைப் பொறுத்து பந்து வீசுகிறார். இதுதான் அவருடைய பந்துவீச்சை சந்தேகத்துக்கு உரியதாக மாற்றுகிறது.
எனவே சமூக வலைதளங்களிலும் சில முன்னாள் வீரர்களும் அவருடைய பந்துவீச்சு குறித்து சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். கடைசியாக நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீன் அவர் பந்தை எறிவதாக சிக்னல் தெரிவித்து வெளியேறி சென்றது குறிப்பிடத்தக்கது.
உண்மை என்ன?
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நான் இதை முடிந்த வரையில் உங்களுக்கு தெளிவு படுத்துகிறேன். அவருடைய பந்துவீச்சில் உள்ள சந்தேகங்களை ஐசிசி சோதனை மையத்தில் மட்டுமே தீர்க்க முடியும். இரண்டாவதாக தனது முழங்கையை 15 டிகிரிக்கு கீழே வளைக்காமல் அவர் இருக்க வேண்டும். இதை மீறி அவர் செயல்படுகிறார் என்பதை கள நடுவர் தீர்மானிக்க முடியாது”
இதையும் படிங்க : டெல்லி ஆடுகளத்தில் இந்திய அணிக்காக இவர் விளையாடுவதை நான் பார்க்க விரும்பவில்லை.. டி20 WC குறித்து இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர்
“இதற்கு ஒரே தீர்வு சோதனைக் கருவியில் அவர் பரிசோதிக்கப்படுவது மட்டும்தான். மேலும் அவர் கிரீசில் நின்று பந்து வீசுவது குறித்து சொல்ல வேண்டும் என்றால், அது பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டு இருக்கிறது என்று தான் நான் நம்புகிறேன். ஏனென்றால் அப்படி நின்று வீசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.






