இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக யாருடைய பெயரை எல்லாம் பரிசீலிக்க வேண்டும் என்றும்? மேலும் தனிப்பட்ட முறையில் தனக்கு யார் கேப்டனாக இருக்க வேண்டும்? என்பது குறித்தும் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடர் என்பதால் இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக கில்லை கொண்டு வருவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிதாக விரும்புவதாக தெரிகிறது. மேலும் பயிற்சியாளர் கம்பீரும் நீண்ட காலம் இருக்கக்கூடிய கேப்டன் தேவை என்று விரும்புகிறார் என்று செய்தி வட்டாரங்கள் கூறுகிறது. எனவே இவருக்கே அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் அணியை சில போட்டிகளில் வெற்றிகரமாக வழி நடத்தி உள்ள பூம்ரா, மற்றும் ஒரு சீனியர் வீரரான கேஎல்.ராகுல் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் ரோகித் சர்மாவுக்கு முன்பாகவே இந்திய டெஸ்ட் அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டன் ஆக வேண்டும் என்கின்ற கருத்தும் இருந்து வந்தது. எனவே தற்போது இந்த நால்வரும் இந்திய டெஸ்ட் புதிய கேப்டன் போட்டியில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவிக்கும் பொழுது “தற்போது இந்திய டெஸ்ட் அணியில் ஜடேஜா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மறந்து விடக்கூடாது. அடுத்த கேப்டனுக்கான பேச்சுவார்த்தையில் அவருடைய பெயரும் இருக்க வேண்டும். குஜராத் டைட்டன்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று நினைக்கிறேன். அது கில் கேப்டன் போட்டிக்கு அதிக வலிமையை கொடுக்கும். ஆனால் டெஸ்ட் கேப்டன் என்பது ஒரு சீசன் சம்பந்தப்பட்டது இல்லை. இதற்கு முதல் தர கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது? என்று தெரிய வேண்டும்”
இதையும் படிங்க : ஐபிஎல் இப்பவே முடியணும்.. பிசிசிஐ எல்லோரையும் மிரட்டிட்டு இருக்கு – மிட்சல் ஜான்சன் குற்றச்சாட்டு
“தற்போது பும்ராவுக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கிறது. அவர் தொடரின் ஐந்து போட்டிகளையும் விளையாடினால் நான் உண்மையில் ஆச்சரியப்படுவேன். அவர் குணமடைவதற்கு நாம் இடைவெளி கொடுக்க வேண்டும். இருப்பினும் அவர் கேப்டனாக வரவில்லை என்றால் நான் ஏமாற்றம் அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.