ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் சிஎஸ்கே அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு களமிறங்க உள்ளார்.
இந்த சூழ்நிலையில் 2011 ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்வு குறித்து அஸ்வின் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஆர்சிபி சிஎஸ்கே குவாலிஃபையர்
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடும் நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. மீண்டும் தனது பழைய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் திரும்பி இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் குவாலிபயர் போட்டியில் பெங்களூர் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது அஸ்வின் ஆர்சிபி வீரர் சௌரப் திவாரிக்கு எதிராக பந்து வீசியபோது, அவர் அடித்த ஷாட் நேராக அஸ்வினின் தலையை தாக்கியது. நல்ல வேலையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. உடனே அங்கிருந்த சக வீரரான சுரேஷ் ரெய்னா ஓடி வந்து அஸ்வினுக்கு முதலில் என்ன ஆனது என்று பார்த்தார். இதுகுறித்து அஸ்வின் சில விஷயங்கள் பகிர்ந்து பேசி இருக்கிறார்.
ரெய்னா செய்த வேலை
அப்போது அவர் “2011ம் ஆண்டு நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அந்த அணி வீரர் சவுரஃப் திவாரி அடித்த பந்து வேகமாக எனது தலையை தாக்கியது. அடிபட்டபோது உடனே சுரேஷ் ரெய்னா ஓடோடி வந்து எனக்கு என்ன ஆனது என்று முதலில் கவனித்தார். அப்போது ஒன்றும் ஆகாமல் இங்கு நான் இப்போது பேசிக் கொண்டிருப்பதை ஒரு வரமாகத்தான் பார்க்கிறேன்.
இதையும் படிங்க:நான் இப்போ வெற்றியை ருசிக்க அவர் ஒருவரே காரணம்.. இல்லன்னா இது எதுவும் சாத்தியம் இல்லை – ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் நான் வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது எனது அம்மா ‘ரெய்னா மிகவும் நல்ல பையன், உனக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் நான் உடனே அக்கறையோடு உன்னை பார்ப்பது போல் தான் ரெய்னாவும் செய்தான்’ என்று கூறினார்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார். அப்போது அவர் வெளிப்படுத்திய சிறந்த பங்களிப்பால்தான் இந்திய அணியில் அவருக்கு விளையாட இடம் கிடைத்தது. அதற்கு பிறகு தான் நிரந்தர டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அஸ்வின் மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






