நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் அதிரடியாக 15 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களுக்கு இது அழுத்தம் இல்லாமல் ஆட உதவி செய்தது. இருந்த போதிலும் இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணிக்கு இரண்டு இடதுகை தொடக்க ஆட்டக்காரர்கள் வருகின்ற பொழுது எதிரணி பார்ட் டைம் ஆப் ஸ்பின்னர் கொண்டு வந்து பிரச்சனை கொடுத்தது. இதற்கு தீர்வாக தற்போது அபிஷேக் ஷர்மாவுடன் வலதுகை பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து ஒரே தவறு
சஞ்சு சாம்சனுக்கு கடந்த சில போட்டிகளாக நல்ல தொடக்கம் கிடைக்கிறது. ஆனால் அந்த தொடக்கங்களை கைப்பற்றி அவர் பெரிய ஸ்கோர் அடிப்பதில்லை. மேலும் அவர் ஆட்டம் இழக்கும் முறை மிகவும் மலிவானதாக இருக்கிறது. இது அவரது நிலைத்தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகவே அவரை தொடர்ந்து விளையாட வைப்பதில் இந்திய அணி நிர்வாகத்திற்கு தயக்கம் இருந்து வருகிறது. அவர் செட்டில் ஆகிவிட்டார் ரன் எடுப்பார் என்கின்ற எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விக்கெட்டை இழந்து விடக் கூடிய வகையில் விளையாடுகிறார்.
இதுதான் பெரிய பிரச்சனை
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “எனக்கு சஞ்சுவிடம் பெரிய பிரச்சனை அவர் ஆட்டம் இழக்கும் முறைதான். அவருக்கு கிடைக்கும் நல்ல தொடக்கங்களை அவர் எடுத்துக் கொண்டு பெரிய ரன்கள் எடுப்பது கிடையாது. அவருடைய பேட் ஸ்டிக்கரில் பந்து பட்டு அவர் ஆட்டம் இழக்கிறார். அவர் நேராக கிரீசில் பின்னோக்கி செல்கிறார். அவர் இடது வலதாக செல்வது இல்லை. இதனால் அவர் உடல் மூடிக் கொள்கிறது. எனவே அவர் தொழில்நுட்ப ரீதியாக இல்லாவிட்டாலும் தந்திர ரீதியாக மாற்றம் செய்ய வேண்டும்”
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் ரன் அடிக்க எங்க அப்பா திட்ட ஆரம்பிச்சுட்டாரு.. தெ.ஆ ஜெயிக்க கடவுளை வேண்டிக்க சொன்னேன் – அர்ஷ்தீப் சிங் பேச்சு
“எனக்குத் தெரிந்த சஞ்சு பெரிய ஸ்கோர் அடித்து போட்டியை மாற்றக்கூடியவர். இவ்வளவு பெரிய மேடையில் இந்த வாய்ப்பு மிகவும் கடினமானது. எனவே ஒன்று அவர் சதம் அடித்து நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய அணிக்கு ஒரு போட்டியை வென்று கொடுக்கும் ஸ்கோரை அவர் அடிக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை அவர் செய்து முடிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






