தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் மகேந்திர சிங் தோனியிடம் ஒரு விஷயத்தை பார்த்து மிகவும் ஆச்சரியப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பாக திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். ஒருவேளை அவர் அடுத்து ஐபிஎல் மினி ஏலத்திற்கு வந்திருந்தால் நிச்சயம் அவரை வாங்குவதற்கு அணிகள் காத்திருந்தன. இருந்தபோதிலும் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார்.
அடுத்து இதை செய்வேன்
இந்த நிலையில் உலகெங்கும் நடக்கும் டி20 தொடர்களில் தான் விளையாட விரும்புவதாக தெரிவித்திருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ஏற்கனவே ஒரு தொடருக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்து விட்டதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மேலும் வெளிநாடுகளில் விளையாடுவதை விட இந்தியாவில் ஐபிஎல் தொடர் விளையாடும் பொழுது அவருக்கு கூடுதலாக பணம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் இதை மறுத்துவிட்டு அவர் வெளிநாட்டு தொடர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது குழப்பமாக இருந்து வருகிறது.
தோனியை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்
இதுகுறித்து அஸ்வின் பேசும்பொழுது “அடுத்த வருடம் ஐபிஎல் விளையாடுவது குறித்து யோசித்தேன். ஆனால் மூன்று மாதங்கள் அதற்காக விளையாட வேண்டும் என்பது எனக்கு நீளமாக தெரிந்தது. இந்த விஷயத்தில்தான் நான் தோனியை பார்த்து மிகவும் ஆச்சரியப்படுகிறேன். நீங்கள் மூன்று மாதங்கள் மட்டுமே விளையாடினாலும், வயதாகும் பொழுது அது சாதாரண விஷயம் கிடையாது. பயணம், விளையாடுவது, மீட்பு என எல்லாம் மிகவும் கடினமானது”
இதையும் படிங்க : ஆசியாவில் 2வது சிறந்த அணி ஆப்கானிஸ்தான்.. பாகிஸ்தான் கேப்டன் செய்த காரியம்.. வைரலாகும் சம்பவம்
“எனக்கு இரவு 11 மணிக்குள் தூங்காவிட்டால் முழுவதும் தூக்கம் வராது. ஆனால் நீங்கள் ஐபிஎல் விளையாடும் பொழுது அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிக்குதான் தூங்க முடியும். எனவே மூன்று மாத காலம் தொடர்ந்து இதை செய்வதை பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன். என் உடல் நலம் பற்றி சிந்தித்தேன். பிறகு பயிற்சியாளராக மாறிவிடலாமா? என்று யோசித்தேன். ஆனால் நான் விளையாட கொஞ்சம் கிரிக்கெட் இருப்பதாக உணர்ந்ததால், வெளிநாடுகளில் விளையாட இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






