நேற்று தலையில் அடிபட்ட சிவம் துபேவுக்கு சரியான மாற்று வீரர் ரமன்தீப் சிங்தான் ஹர்ஷித் ராணா கிடையாது என இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் பவுன்சர் பந்து சிவம் துபே ஹெல்மெட்டை தாக்கியதால் அவர் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் விளையாட முடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா களம் இறங்கியது கிரிக்கெட் உலகில் பெரிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது.
இது என்ன இம்பேக்ட் பிளேயரா?
இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தற்போது இந்த விளையாட்டு முடிந்து விட்டது. இந்தியா சொந்த மண்ணில் மீண்டும் டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. நேற்று நடந்தது என்ன மாதிரியான போட்டி? ஐபிஎல் தொடரை பிரதி எடுத்தது போல இருந்தது. இம்பேக்ட் பிளேயரை வைத்து விளையாடுவது போல நடந்திருக்கிறது”
“சிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித்ராணா எப்படி களம் இறங்கினார்? என்பதுதான் விவாதத்தின் முக்கிய மையமாக இருக்கிறது. இது சர்வதேச போட்டி என்பதை மறந்து விட்டு நாம் ஐபிஎல் போல விளையாட விட்டோமா? கடந்த காலத்தில் தலையில் அடிபட்ட ரவிந்திர ஜடேஜாவுக்காக சாகல் விளையாடினார். அதைக் கூட ஒரு சுழல் பந்துவீச்சாளருக்கு மாற்றாக ஒரு சுழல் பந்துவீச்சாளர் என்று புரிந்து கொள்ள முடியும்”
ரமன்தீப் சிங்தான் சரியானவர்
“இந்த போட்டியில் உள்ளே வந்து விளையாடி இருக்க வேண்டியவர் ரமன்தீப் சிங். இதுவே நாம் ஹர்ஷித் ராணா கொஞ்சம் பேட்டிங் செய்யட்டும் சிவம் துபே கொஞ்சம் பந்து வீசட்டும் என்று செய்ய முடியுமா? உண்மையில் சரியான மாற்று வீரராக வெளியில் இருந்தது ரமன்தீப் சிங்தான். எதிர்காலத்தில் இப்படியான தவறுகள் நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: 242 ரன்.. இலங்கை அணி வரலாற்று இன்னிங்ஸ் படுதோல்வி.. ஆஸியின் தொடரும் வெற்றிகள்.. முதல் டெஸ்ட்
“இதில் இரு அணிகளின் பங்கு என்று எதுவும் கிடையாது. இந்திய அணி ஹர்ஷித் ராணா வேண்டுமென்று கூட கேட்க செய்யலாம். ஆனால் எப்படி போட்டி நடுவர் ஹர்ஷித் ராணாவை விளையாட வைக்க சம்மதிக்க முடியும்? இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. நிச்சயமாக இப்படி நடந்து இருக்கக் கூடாது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.