இலங்கை அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று படுதோல்வி அடைந்திருக்கிறது.
தற்போது ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை காலே மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
இமாலய ரன் குவித்த ஆஸ்திரேலியா
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவஜா மிகச்சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து 352 பந்துகளில் 232 ரன்கள் குவித்தார். இன்னொரு பக்கத்தில் கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 251 பந்துகளில் 141 ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 94 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா அணி இறுதியாக 154 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பிரபா ஜெயசூர்யா நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இலங்கை அணி வரலாற்றுத் தோல்வி
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 52.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. அந்த அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 139 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் குஹ்னேமன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து ஃபாலோ ஆன் ஆகி விளையாடிய இலங்கை அணி மீண்டும் 54.3 ஓவரில் 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த முறை அந்த அணியின் சுழல் பந்துவீச்சாளர் வாண்டர்சே அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் நாதன் லயன் மற்றும் குஹ்னேமன் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ஒரே செக்ஷனில் 2 முறை சந்திமல் விக்கெட்.. அஸ்வினின் சாதனையையும் முறியடித்த நாதன் லயான்.. கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு
இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே மோசமான இன்னிங்ஸ் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் இந்திய அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருந்தது!






