இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட் கைப்பற்றியதின் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் பந்துவீச்சாளராக புது சாதனை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நெருக்கடியில் இருந்த பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் குவித்து இந்திய அணியை காப்பாற்றினார். இன்று மீண்டும் பந்துவீச்சில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ரோஹித் சர்மா சீக்கிரத்தில் டிக்ளேர் செய்ததை சரிப்படுத்தி இருக்கிறார்.
அஸ்வினுக்கு நடக்கும் அநியாயம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் ஒவ்வொரு முறையும் இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என மிகப் பெரிய அளவில் பங்களிப்பு செய்து வெற்றிகளை கொண்டு வரக்கூடிய வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து இருந்து வருகிறார். தற்பொழுது பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் போட்டியே சாட்சி.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மட்டும் கண்டிஷனை காரணம் காட்டி ரவிச்சந்திரன் அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்ப்பதில்லை. இரண்டு வருடங்கள் முழுமையாக விளையாடி அணியை இறுதி போட்டிக்கு அனுப்பி விட்டு, வெளியில் உட்கார்ந்து இறுதி போட்டியில் அணி விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தள்ளப்பட்டு இருக்கிறார்.
பேட் கம்மின்சை தாண்டி சாதனை
இன்று மூன்று விக்கெட் கைப்பற்றியதின் மூலம் ஒட்டுமொத்தமாக நடைபெற்று இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் 36 போட்டிகளில் விளையாடி 176 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸை தாண்டி இரண்டாவது இடம் பிடித்து அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.
பாட் கம்மின்ஸ் 42 போட்டிகளில் 175 விக்கெட் எடுத்திருக்கிறார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயன் 43 போட்டிகளில் விளையாடி 187 விக்கெட் எடுத்திருக்கிறார். அடுத்தடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாட இருப்பதால் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை உடைத்து புது வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க : இந்தியாவில் 2 பேர்.. அதில் ஒருத்தர் ரிஷப் பண்ட்.. இதயத்தை ஜெயிச்சிட்ட தம்பி – பாக் பசித் அலி பேட்டி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் :
நாதன் லியோன் (ஆஸ்திரேலியா) – 187
ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 176*
பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) – 175
மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) – 147
ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 134