நம்பர் 3 வீரராக வந்து விளையாட வேண்டிய அவசியம் என்ன – காரணத்தை விளக்கியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின்

0
2765

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நேற்று டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 50 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய டெல்லி அணியை 19வது ஓவரின் முதல் பந்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டெல்லி அணியில் அதிகபட்சமாக மிட்ச்செல் மார்ஷ் 89 ரன்கள் குவித்தார்.

டாப் ஆர்டரில் வந்து ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வின்

ராஜஸ்தான் அணியின் திட்டம் இந்த சீசனில் சரியாக இருக்கின்றது. ஆறு பேட்ஸ்மேன், 5 பவுலர்கள்(ஒரு ஆல்ரவுண்டர் வீரர் உட்பட) என சரியான அணியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ராஜஸ்தான் அணியில் பவர் பிளே ஓவர்களில் ஒரு விக்கெட் போனால் ரவிச்சந்திரன் அஸ்வின் டாப் ஆர்டரில் வந்து விளையாடுகிறார்.

அப்படி நேற்று நடந்த போட்டியில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்ததும், ரவிச்சந்திரன் அஸ்வின் டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடினார். 38 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் உட்பட 50 ரன்கள் குவித்து அசத்தினார். இது அவருடைய மெய்டன் ஐபிஎல் அரை சதமாகும்.

பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்ததும், பின்ச் ஹிட்டர் ஆக அஸ்வின் விளையாடுவதுதான் திட்டமா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,”அப்படி எந்த விதமான தனிப்பட்ட திட்டமோ அல்லது வியூகமோ இதில் கிடையாது. நடப்பு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பாக நான் என்னுடைய பேட்டிங்கை சற்று மெருகேற்றி இருக்கிறேன்.

பயிற்சி ஆட்டங்களில் என்னுடைய ஆட்டத்தை ராஜஸ்தான் அணி நிர்வாகம் பாராட்டியது. அப்பொழுது அவர்கள் என்னை நடப்பு ஐபிஎல் தொடரில் டாப் ஆர்டரில் விளையாட வைப்பது குறித்து பேசினார்கள். சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கமும் மன தைரியத்தையும் கடைபிடிக்க வேண்டும். நேற்று என்னுடைய ஆட்டம் சிறப்பாக இருந்ததில் மகிழ்ச்சி இதை அப்படியே தொடர விரும்புகிறேன்” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் நேற்று பிட்ச் சற்று கடினமாக இருந்தது. 20-30 ரன்கள் குறைவாக நாங்கள் குவித்து விட்டோம். நேற்று டாஸ் முடிவு அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. ஷிம்ரோன் ஹெட்மையர் அவருடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

ஒரு அணியில் நல்ல பினிஷர் இருப்பது அவசியம். அவர் இல்லாத நேரத்தில் தற்போது வேன்டர் டசன் அணியில் விளையாடி வருகிறார். கூடிய விரைவில் ஹெட்மையர் அணிக்கு திரும்புவார். இருப்பினும் தற்போது அதையெல்லாம் மறந்து மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் நாங்கள் விளையாட வேண்டும். நிச்சயமாக மீதமிருக்கும் போட்டிகளில் வெற்றி பெரும் வகையில் நாங்கள் செயல்படுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.