விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நிரூபிக்க வேண்டும் என்பது நகைப்புக்குரியது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார். மேலும் அதில் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஒரே ஒரு வடிவத்தில் மட்டும் விளையாடுவதால் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் மிகச் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்தியத் தேர்வுக்குழு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வற்புறுத்தியதாகவும், அதற்கு ரோகித் சர்மா சம்மதித்த நிலையில் விராட் கோலி பிடிவாதம் காட்டி வருவதாகவும், இதனால் இழுபறியான நிலையில் குழப்பமும் காணப்படுகிறது என செய்திகள் வெளி வந்தது.
இந்த நிலையில் விராட் கோலி சில நாட்களுக்கு முன்பாக விஜய் ஹசாரே டிராபியில் விளையாட தயாராக இருப்பதாக அறிவித்து விட்டார். மேலும் தென் ஆப்பிரிக்க தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஆட்டம் இழக்காமல் ஒரு அரை சதம் அடித்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார். இன்னொரு பக்கத்தில் ரோஹித் சர்மா இரண்டு அரை சதங்கள் அடித்திருக்கிறார்.
யாருக்கும் நிரூபிக்க வேண்டியது இல்லை
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது ” ரோகித் சர்மா உடல் தகுதியில் உழைத்து வந்திருப்பது சிறப்பான விஷயம். இருவருமே சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள் என்பதிலிருந்து அவர்கள் எவ்வளவு சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு பிறகும் நிரூபிக்க வேண்டும் என்பது சிரிப்பை வரவழைக்கக் கூடியது. இது எல்லாமே ஒரு செய்திதான். இவ்வளவு நீண்ட வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நல்லது கெட்டது என நிறைய நமக்கு இருக்கிறது”
இதையும் படிங்க : கில் டி20 தொடரில் விளையாட தயாராகி விட்டாரா.. இந்திய அணியின் துவக்க வீரர் யார்? – அவரே வெளியிட்ட தகவல்
“எனவே இவையெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். நாம் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியது கிடையாது. உண்மையில் இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கு பாடமான விஷயம். ஏனென்றால் நீங்கள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால், நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். இங்கு விளையாட்டை விட பெரியவர்கள் யாரும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






