ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிரா செய்த நிலையில் அந்த போட்டியோடு ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் ஒரு வீரர் ஓய்வு பெற்றால் அவருக்கு பிரியா விடை கொடுப்பது தவறு என நினைப்பதாக கூறும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதற்கான காரணத்தை கூறுகிறார்.
ஓய்வு பெற்ற அஸ்வின்
இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் எடுக்கப்படாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவினை அறிவித்தார். அதாவது அதற்கு முன்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சில ஆண்டுகளுக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்த காரணத்தால் அஸ்வின் இந்திய அணியில் தனது வாய்ப்பு பறிபோகும் நிலையை உணர்ந்தார்.
இந்த சூழ்நிலையில் உடனடியாக ஒரு முடிவை எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு அறிவித்திருக்கும் அஸ்வின் ஓய்வு பெறும் போது பிரியாவிடை கொடுத்து வழி அனுப்புவது தவறு என தான் நினைப்பதாக கூறியிருக்கிறார். மேலும் இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது போல் உணர்வதாக சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பிரியாவிடை கொடுப்பது தவறு
இதுகுறித்து அஸ்வின் கூறும் பொழுது “என்னை பொறுத்தவரையில் பிரம்மாண்டமான பிரியாவிடைகள் தவறு. நீங்கள் யாருக்கும் பிரம்மாண்டமான பிரியாவிடை விழாக்களை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக நீங்கள் எனக்கு ஒரு பிரியாவிடை நிகழ்வே நடத்தக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எனக்காக யாரும் ஒரு துளி கண்ணீர் விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
இதையும் படிங்க:விராட் கோலியால முடியல.. அந்த நபரும் சரி பண்ணல.. வெளியே இருந்துதான் ஆள் வரணும் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி
இது ஒரு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகிறது. ஒருவரது சாதனைகள், விளையாட்டை விட்டுச் செல்லும் மரபு, விளையாட்டை விட்டு வெளியேறிய விதம் ஆகியவற்றால் மக்கள் ஈர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பிரியாவிடை நிகழ்வுகள் தவறு என்பது என் கருத்து. நான் என் வாழ்க்கையின் ஒரு பகுதியை விட்டு விட்டேன். இந்த பகுதிக்கு ஒரு முற்றுப்புள்ளி. இருந்தாலும் எனது யூடியூப் சேனல் மூலம் கிரிக்கெட் குறித்து ஏதேனும் நான் ஒன்றை செய்வேன், கிரிக்கெட்டை சுற்றி என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் நான் எப்போதும் கிரிக்கெட் உடன் தொடர்பில் இருப்பேன்” என்று கூறி இருக்கிறார்.






