இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். அவர் இந்த ஆண்டு மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்திற்கு சரிந்து மோசமான முறையில் வெளியேறியது. இந்த அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வாங்கப்பட்டது தவறான முடிவு என பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன.
சிஎஸ்கே எதுவும் சொல்லவில்லை
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தான் சிஎஸ்கே அணியிடம் தன்னுடைய தேவை மற்றும் பங்கு சிஎஸ்கே அணிக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பது குறித்து கேட்டிருப்பதாகவும், ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்னும் பதில் சொல்லவில்லை என கடந்த முறை பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று திடீரென ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். மேலும் அவர் ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளர் குழுவில் இணைந்து செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் வெளியிட்ட அறிக்கை
ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஓய்வு அறிக்கையில் “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஐபிஎல் தொடரில் ஒரு வீரராக என்னுடைய நேரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் பல்வேறு லீக்குகளை ஆராய்பவராக என்னுடைய நேரம் இன்று துவங்குகிறது”
இதையும் படிங்க : இந்தியா, பாகிஸ்தான் போட்டி விருந்தாக அமையும்.. இருத்தரப்பும் அமைதி காக்கனும்- வசீம் அக்ரம் கருத்து
“பல வருடங்களாக பல அற்புதமான நினைவுகள் மற்றும் உறவுகளை வழங்கிய அனைத்து உரிமையாளர்களுக்கும், மிக முக்கியமாக ஐபிஎல் மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்னால் இருப்பதை அனுபவித்து சிறப்பாக பயன்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






