இந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பற்றியான விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்து பேசி இருக்கிறார். மேலும் குல்தீப் யாதவ் மாற்றிக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் குறித்தும் அறிவுரை கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குல்தீப் யாதவ் ரச்சின் ரவீந்தரா மற்றும் கேன் வில்லியம்சன் இருவரது விக்கெட்டையும் உடனுக்குடன் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அவருடைய இடத்திற்கு வாஷிங்டன் சுந்தரை கொண்டு வர வேண்டும் என வெளியில் நிறைய விமர்சனங்கள் இருந்தது.
தினேஷ் கார்த்திக் அப்படி சொல்லக்கூடாது
இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “என்னுடைய அன்பு நண்பர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட் வர்ணனையில் குல்தீப் யாதவுக்கு இது ஒரு நல்ல தொடராக அமையவில்லை என்று கூறினார். எனக்கு இதை கேட்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்தது. விக்கெட் எடுக்கவில்லை என்றால் உடனே ஒரு தொடர் வந்து வீச்சாளருக்கு சிறப்பானதாக இல்லை என்று ஆகிவிடுமா?”
“தற்போது வருண் சக்கரவர்த்தி விக்கெட் கைப்பற்றுகிறார். அவரை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சரியான இடங்களில் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் நன்றாக பந்து வீசுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதன் ஒரே காரணத்தால் குல்தீப் யாதவ் சரியாக பந்து வீசவில்லை என்று ஆகிவிடுமா? உண்மையில் அப்படி எதுவும் கிடையாது”
குல்தீப் இனி இதை செய்யணும்
“நாம் ஒவ்வொரு போட்டியின் மற்றும் தொடரின் முடிவிலும் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகள் கொடுத்து, அந்தந்த போட்டி மற்றும் தொடருக்குள் நடந்த மற்ற சில முக்கிய விஷயங்கள் பற்றி மறந்து விடுகிறோம். இதனால் குல்தீப் யாதவ் ஒவ்வொரு போட்டியிலும் என்ன செய்திருக்கிறார் என்பது நம்முடைய கவனத்துக்கு வராமலேயே போய் விடுகிறது”
இதையும் படிங்க : துபாய்க்கு உலக லெவனை கூட்டிட்டு வாங்க.. ஆனா இந்தியா அவங்களையும் ஜெயிக்கும் – ஷாஹித் அப்ரிடி பாராட்டு
” அதே சமயத்தில் குல்தீப் யாதவ் பந்து வீசிவிட்டு மீண்டும் திரும்பி ஸ்டம்புக்கு வந்து விட வேண்டும். அவர் இறுதிப் போட்டிக்கு முன்பாக இரண்டு முறை த்ரோ செய்த பந்தை பிடிக்க தவற விட்டார். மீண்டும் ஒருமுறை அவர் ஸ்டெம்புக்கு திரும்பாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதன் காரணமாக ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரது விமர்சனத்தையும் சந்திக்க வேண்டி இருந்தது. இனி அவர் பந்தை வீசிவிட்டு ஸ்டம்புக்கு திரும்ப வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






