நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி பாராட்டிப் பேசியுள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் 199 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரராகக் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து இவர் முதல் விக்கெட்டுக்கு வெறும் 7.1 ஓவர்களில் 133 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தார்.
இளம் வீரர்களின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சோனி ஸ்போர்ட்ஸ் விவாதத்தின் போது ரவி சாஸ்திரி வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான பேட்டிங் திறமையை வெகுவாகப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்போது “அவருக்குச் சிறந்த கிரிக்கெட் மூளை இருக்கிறது. அவரிடம் இளமைத் துடிப்பு உள்ளது. அவர் எங்கு விளையாடினாலும் எதற்கும் அஞ்சுவதில்லை. எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கவே அவர் விரும்புகிறார். ஐபிஎல் தொடரிலும் இதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அவர் எப்போதும் சிங்கிள் தட்டுவதோ அல்லது பந்தை டிஃபென்ஸ் செய்வதோ பற்றி யோசிப்பதில்லை. பந்து தனது ரேஞ்சில் இருந்தால் அதை அடித்துத் பறக்க நினைக்கிறார். அவரிடம் உள்ள தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து ரவி சாஸ்திரி பேசும்போது “அபிஷேக் ஷர்மாவைப் போலவே அவரும் பந்தினை பவராக்க பவுண்டரி எல்லைக்கு அனுப்பக் கூடியவர். அவரின் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணி பவுலர்களை எந்த அச்சமும் இல்லாமல் எதிர்கொள்கிறார்” என்று கூறி முடித்து இருக்கிறார்.






