சர்வதேச டி20 போட்டிகளை ரத்து செய்து விட்டு 2 ஐபிஎல் தொடர்கள் நடத்த வேண்டும் – ரவி சாஸ்திரி அதிரடிப் பேச்சு

0
83
Ravi Shastri

2022ஆம் ஆண்டு ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி, குஜராத் டைட்டன்ஸ் அணி புது அணியாகத் தொடருக்குள் வந்து கோப்பையை வென்று சாதித்திருக்கிறது. கோவிட் தொற்றால் உலகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த சில வருடங்களாகப் பாதித்திருந்த நிலையில், இந்தியாவிற்குள், இரசிகர்களின் முன்னிலையில் வெற்றிக்கரமாக நடத்தப்பட்ட ஐ.பி.எல் தொடர் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

தற்பொழுது ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 29ஆம் தேதி முடிந்திருக்க, அடுத்து இந்திய அணி உள்நாட்டில் ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்க அணியோடு, இந்த மாதம் 9ஆம் தேதி முதல் ஆட்டத்தில் மோதுகிறது. இதற்கான இந்திய அணி ஐ.பி.எல் தொடர் நடந்த பொழுதே தொடரின் கடைசிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீட் பும்ரா, மொகம்மத் ஷமி ஆகிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுல் தலைமையில் இளம் மற்றும் மூத்த வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்தத் தொடர் வருகின்ற வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே விளையாடப்படும் இருபது ஓவர் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் பற்றி தன் அதிரடியான கருத்தை, ஆகாஷ் சோப்ராவுடன் பகிர்ந்திருக்கிறார்.

கிரிக்கெட்டின் எதிர்காலம் வருங்காலங்களில் எப்படி அமையுமென்று பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “ஒவ்வொரு காலண்டர் ஆண்டிலும் இரு ஐ.பி.எல் தொடர்கள் எதிர்காலத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார்.

இதற்கு உடன்பட்ட இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “அதுதான் எதிர்காலம். அது நாளை நடக்கலாம். மொத்தம் 140 ஆட்டங்கள் இரண்டு பருவத்தில் 70-70 ஆட்டங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படலாம். இது ஓவர்-டோஸ் என்றுகூட நினைக்கலாம். ஆனால் இந்தியாவில் ஓவர்-டோஸ் என்று எதுவும் கிடையாது. நான் பயோ பபிளுக்கு வெளியே இருந்து மக்களைப் பார்க்கிறேன். அவர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்று என்னால் உணர முடிகிறது. அவர்கள் இதை விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் இருபது ஓவர் போட்டிகள் யாருடைய ஞாபகத்திலும் இருப்பதில்லை. உலகக்கோப்பை இருபது ஓவர் போட்டிகள்தான் நினைவில் இருக்கின்றன. நான் இந்திய அணியின் பயிற்சியாளராய் இருந்த பொழுது இந்திய அணி விளையாடிய எந்த இருபது ஓவர் போட்டிகளும் என் ஞாபகத்தில் இல்லை. துரதிஷ்டவசமாக நாங்கள் இருபது ஓவர் உலகக்கோப்பையை வெல்லாததால் அந்த நினைவுகளும் இல்லை. ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளுக்குமே இருபது ஓவர் போட்டிகளை நடத்திக்கொள்ள அனுமதி இருக்கிறது. நடத்தவும்படுகிறது. இதில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இருபது ஓவர் போட்டி உலகக்கோப்பை தொடரும் இருக்கிறது. இருபது ஓவர் கிரிக்கெட்டை இதில் ஆடினால் போதுமானது. இருநாடுகளுக்கு இடையேயான சர்வதேச இருபது ஓவர் போட்டி தொடர்கள் தேவையற்றது” என்று கூறினார்!