தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் விராட் கோலி அடுத்து கிரிக்கெட்டில் என்ன செய்வார் என்பது குறித்து வருத்தமான ஒரு விஷயத்தை இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
கடந்த வாரத்தில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது 36 ஆவது வயதில் அறிவித்து அதிர்ச்சியை உண்டாக்கினார். இந்த நிலையில் அவர் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்வாரா? கிரிக்கெட் உடன் அவரது தொடர்பு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்து ரசிகர்களுக்கு கவலையான சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
விராட் கோலியின் மனநிலை
விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரரின் மனநிலையைக் கொண்ட வித்தியாசமானவர். அவர் வெளிநாட்டு வீரர்கள் போல விளையாட்டை விட குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவராக இடையில் மாறிவிட்டார். விளையாட்டிற்கு பிறகு குடும்பத்துடன் தான் நாம் இருந்தாக வேண்டும் என்பதால் எப்பொழுதும் நமக்கு குடும்பமே முக்கியம் என்று கூறியவர்.
இதன் காரணமாக 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? அவர் மற்ற ஏதாவது ஒரு வகையில் கிரிக்கெட் உடன் தொடர்பில் இருப்பாரா? என்பது குறித்து சந்தேகங்கள் ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. தற்போது இதற்கு ரவி சாஸ்திரி வருத்தத்துக்குரிய ஒரு பதிலை கொடுத்திருக்கிறார்.
விராட் கோலி இதை செய்ய மாட்டார்
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட இருக்கிறார். அவர் இந்த வடிவத்தில் ஓய்வு பெற்றவுடன் மொத்தமாக கிரிக்கெட்டில் இருந்து வெளியேறி விடுவார் என்று எனக்கு தெரியும். அவர் பயிற்சியாளராகவோ அல்லது கிரிக்கெட் வர்ணனையாளராகவோ நிச்சயம் வரமாட்டார். இங்கிலாந்தில் இந்திய அணி முதல் டெஸ்ட் விளையாடும் பொழுது நான் அவரை தவற விடுவேன். அவர் களத்தில் ஒரு சாம்பியனாக இருந்தார். அதை கொஞ்சமும் விட்டுத் தரவில்லை”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சதம் அடித்தும் ராகுலை விமர்சிப்பது ஏன்? மற்றவங்க குறை கண்ணுக்கு தெரியலையா? – டாம் மூடி கருத்து
“சந்தேகத்திற்கு இடமின்றி விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் அணிக்காக களத்தில் சண்டையிடவும் தயாராக இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைப்பது ஒரு நீடித்த பாரம்பரியம். ஒரு விக்கெட் விழும் பொழுது அவருடைய காட்டுத்தனமான கொண்டாட்டங்களையும், சக பேட்ஸ்மேன் வெற்றிக்கு அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியையும் அணி எப்பொழுதும் இழக்கும்” என்று கூறியிருக்கிறார்.






