ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில், கேஎல் ராகுலின் அபார சதம் மூலம் டெல்லி அணி முதல் இன்னிங்ஸில் 199 ரன்கள் எடுத்த போதிலும், பெரிய தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வி, டெல்லி கேப்பிடல்ஸின் பிளேஆஃப் வாய்ப்புகளை மேலும் கடினமாக்கியது.
கேஎல் ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 172.30 ஆக இருந்தது. 33 வயதான இந்த வீரரின் இந்த அற்புதமான இன்னிங்ஸ் இருந்தபோதிலும், அவரது ஆட்டத்தின் தொடக்கம் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரும் ஐபிஎல் பயிற்சியாளருமான டாம் மூடி, 2025 சாம்பியன்ஸ் ட்ரோஃபி வெற்றியாளரான ராகுலுக்கு எதிரான விமர்சனங்களை கண்டித்து கருத்து தெரிவித்தார்.
ராகுல் சிறந்த வீரர்:
மற்ற பேட்ஸ்மேன்கள் ராகுலுக்கு ஆதரவாக ஆடியிருந்தால், அணி 200-க்கு மேல் ரன்கள் எடுத்திருக்க முடியும் என்று அவர் விளக்கினார்.இது குறித்து பேசிய அவர்,“கேஎல் ராகுலைச் சுற்றிய விமர்சனங்கள் எப்போதும் ஆச்சரியமாக இருக்கின்றன. அவர் பலர் நினைப்பதை விட மிகச் சிறந்த வீரர். இந்த இன்னிங்ஸை நான் ஒரு அற்புதமான ஆட்டமாகப் பார்க்கிறேன்.”
“போட்டியை யார் வெல்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர் ஆட்டநாயகன் விருது பெறுவாரா இல்லையா என்பது தெரியும். ஆனால், இந்த இன்னிங்ஸைப் பார்க்கும்போது, 220 ரன்களை எட்டாமல் போனதற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் 150 ஸ்ட்ரைக் ரேட் தான் காரணம். ஒரு பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில், தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்,” என்று இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற டாம் மூடி கூறினார்.‘
கிரிக்கெட் தனிநபர் விளையாட்டு அல்ல:
“ஒருவர் அணியின் ஸ்கோரை உயர்த்தும்போது, மற்றவர்கள் 10 பந்துகளில் 30 ரன்கள் போன்ற தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எப்போதும் ஒரே நபரை குறை கூறுவதற்கு பதிலாக, மற்றவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்,” என்று மூடி மேலும் கூறினார்.
கிரிக்கெட் ஒரு தனிநபர் விளையாட்டு இல்லை என்று கூறி, ராகுலுடன் பேட் செய்த மற்ற வீரர்களிடையே சிறந்த தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்று மூடி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: 10வது இடத்திற்கான போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் மோதல்.. நேருக்கு நேர் வெற்றி.. பிட்ச் ரிப்போர்ட் விவரம்
“அணிக்கு 220 ரன்களை எட்ட வாய்ப்பு இருந்தது. ஆனால் அணியாக அதைச் செய்யவில்லை. பேட்ஸ்மேன்கள் இடையே, ‘இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடிக்க வேண்டும், இதை பெரிய ஓவராக மாற்றுவோம்’ போன்ற உரையாடல்கள் இருக்க வேண்டும்,நடு ஓவர்களில் அவர்கள் சற்று மந்தமாக இருந்தனர். மேலும், கேஎல் ராகுல் நான்கு ஓவர்களில் வெறும் ஆறு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். இதனால் அவரது ரிதமும் பாதிக்கப்பட்டது,” என்று மூடி தெரிவித்துள்ளார்.






