தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாக இந்திய முன்னாள் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெறுவதாக இருப்பதாகவும், அவரை சமாதானப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி ஓய்வு முடிவை என்று அறிவித்திருக்கிறார்.
ரவி சாஸ்திரி – விராட் கோலி சாதனை
விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் இருந்த காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருந்தது. வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு, வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியை மட்டும் வெல்லாமல் தொடரையும் வெல்ல முடியும் என்ற அளவுக்கு இந்திய டெஸ்ட் அணி வளர்ந்தது.
மேலும் வீரர்களின் உடல் தகுதி மட்டும் இல்லாமல், எந்த சூழ்நிலையிலும் வெற்றியை நோக்கி விளையாடும் மனநிலையையும், ஆக்ரோஷமாக விளையாட்டை அணுகும் கலாச்சாரத்தையும் இருவரும் சேர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் வளர்த்தெடுத்தார்கள். இந்த ஜோடி இணைந்து செயல்பட்ட காலமே இந்திய டெஸ்ட் வரலாற்றில் பொற்காலமாக பார்க்கப்படுகிறது.
எனக்கு செய்தவற்றுக்கு நன்றி
இந்த நிலையில் தன்னுடைய கூட்டாளியான விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி மிகவும் உருக்கமான முறையில் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் அவர் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருப்பது தன்னால் நம்ப முடியவில்லை என்றும் வருத்தப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : பிசிசிஐ தவறு செய்து விட்டது.. நானாக இருந்தால் கோலியை விட்டிருக்க மாட்டேன்.. ஸ்ரீகாந்த் கருத்து
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும்பொழுது “நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை முடித்துக் கொண்டீர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நீங்கள் விளையாடிய மற்றும் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் அற்புதமான தூதுவராக இருந்தீர்கள். அனைவருக்கும் மேலும் எனக்கு தனிப்பட்ட முறையில் அளித்த நீடித்த நினைவுகளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதை நான் வாழ்நாள் முழுதும் போற்றுவேன். நீங்கள் நல்ல முறையில் செல்லுங்கள் சாம்பியன்” என்று கூறி இருக்கிறார்.






