உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் காயம் காரமாக இந்தத் தொடரில் இடம் பெறவில்லை. இதனால் கே எஸ் பரத் மாற்று விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று கே எல் ராகுலும் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 41 வயதான தோனி ஐ பி எல் தொடரில் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடி வருகிறார். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோனி விளையாட வாய்ப்பு இருக்கிறதா என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதிலை தற்போது பார்க்கலாம். முதல் தரப் போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் எப்படி உடல் தகுதியுடன் இருந்து விக்கெட் கீப்பிங் செய்ய முடியும் என்பதை இந்த ஐபிஎல் தொடரில் தோனி இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி இருக்கிறார். ஆனால் தோனி ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து மாற்ற முடியாது.
தோனி நினைத்திருந்தால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூடுதலாக ஒன்றரை வருடம் விளையாடி இருக்க முடியும். ஏனென்றால் நமது நாட்டில் எண்களை மட்டும் தான் பார்ப்போம். தோனியும் 100 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கலாம். மைதானத்தில் ரசிகர்கள் கூடி அவருக்கு பிரியா விடை அளித்திருக்க முடியும். கடைசி போட்டியில் ரசிகர் முன் விளையாடி அவர் குட் பாய் சொல்லி இருக்கலாம்.
ஆனால் இதனை எல்லாம் தோனி விரும்ப மாட்டார். புதிய வீரன் வந்து விட்டார். இனி நான் விளையாட தேவை இல்லை என அறிவித்துவிட்டு தோனி சென்று விட்டார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். தோனி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினாலும் அவருக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது.இதனால் அவரால் முன்பு போல் ஓட முடியவில்லை. இந்த காரணத்தினால் ஐபிஎல் தொடரில் கூட கடைசி கட்டத்தில் தான் தோனி விளையாடுகிறார்.
இதனால் அவர் இந்திய அணியில் திரும்பி விளையாடுவார் என்று நினைப்பதெல்லாம் நிஜத்துக்கு ஒத்து வராத விஷயம் ஆகும். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானேவும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சுப்மன் கில் , ரோகித் சர்மா ஜோடி தொடக்க வீரராக களமிறங்கி கே எல் ராகுலை நடுவரிசையில் விக்கெட் கீப்பராக சேர்ப்பது இந்திய அணியின் பேலன்ஸுக்கு சரியாக இருக்கும்.






