ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் பிறந்த ரவி பிஷ்னோய் 2020ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிக அற்புதமாக விளையாடினார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை ( 17 விக்கெட்டுகள் ) கைப்பற்றிய பந்து வீச்சாளராக வலம் வந்தார். இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய அவரின் திறமையை கண்டு ஈர்ந்த பஞ்சாப் அணி, 2020 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரவி பிஷ்னோயை கைப்பற்றியது.
பஞ்சாப் அணிக்காக கடந்த ஆண்டு மொத்தமாக 12 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு எமர்ஜிங் கிரிக்கெட் வீரருக்கான பட்டியலிலும் இடம் பிடித்தார். கடந்த ஆண்டை போலவே தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் மொத்தமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி பிஷ்னோய் அசத்தி வருகிறார்.
இவரது விக்கெட்டை கைப்பற்றுவது மிகவும் கடினம்
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடிய போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். சமீபத்தில் பேசிய அவர், எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றுவது யாருக்குதான் மகிழ்ச்சியைக் கொடுக்காது. இவர்கள் மூவரும் ஒப்பற்ற கிரிக்கெட் வீரர்கள்.
இவர்களுக்கு எதிரான போட்டியில் எனது ஓவரில் இவர்கள் அவுட் ஆனால் அது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கும். அதுமட்டுமின்றி எனது பங்களிப்பின் மூலமாக என்னுடைய அணி வெற்றி பெற்றால், அதை விட பெரிய சந்தோசம் வேறு எதுவும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இவர்கள் அனைவரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள். இவர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி, இவர்களின் விக்கெட்டை கைப்பற்றுவது மிகப்பெரிய விஷயம். இருப்பினும் என்னைப் பொறுத்தவரையில் நான் சந்தித்த பேட்ஸ்மேன்களில், சூர்யகுமார் யாதவ் சற்று வித்தியாசமானவர். அவருக்கு எதிராக பந்துவீசி அவருடைய விக்கெட்டை கைப்பற்றுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நான் விளையாடும் பொழுது என்னுடைய பந்துவீச்சில் அவர் அவுட் ஆனால், ஒரு பந்து வீச்சாளராக அது எனக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கும் என்று ரவி பிஷ்னோய் கூறினார்.