இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்ததுடன், அந்த அணியின் செயல்பாடும் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது.
பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான பார்ம் காரணமாக, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பாகிஸ்தான் அணி இதுதான் என்று பிரிட்டிஷ் மீடியா கடுமையாக விமர்சித்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விமர்சனம் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை முற்றிலும் சரிந்து விட்டதால், பவுலர்களால் போட்டியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாமல் போய்விட்டது. முன்னாள் கேப்டன் பாபர் அசாம் அணிக்கு திரும்பியும் கூட அவராலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான நிலை குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் பேசும்போது “அனைவரும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதுதான் மிகவும் மோசமான பாகிஸ்தான் அணி என்று பேசி வருகிறார்கள், ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான கிரிக்கெட் போர்டு இதுதான் என்பதைப் பற்றி யாருமே பேசுவது இல்லை” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “இங்கே இருக்கக்கூடிய செலக்சன் கமிட்டி மற்றும் கோச் ஆகியோரும் மிகவும் மோசமான நிலையில் தான் இருக்கிறார்கள், இந்த காரணங்களை எல்லாம் நீங்கள் ஒன்று சேர்த்து பார்த்தால் இந்த அணியை சீரழித்தது யார் என்ற உண்மை உங்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்” என்று கூறி இருக்கிறார்.






