எதிர்காலத்தில் இவர் இந்தியாவின் பெரிய ஸ்பின்னராக வருவார் – ரஷீத் கான் நம்பிக்கை

0
464
Rashid Khan

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு அணி என்றால் அது குஜராத் டைட்டன்ஸ் அணிதான். நடந்து முடிந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தின் முடிவில், கிரிக்கெட் இரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரது விமர்சனத்துக்கும் உள்ளான அணி குஜராத் அணி. காரணம், பேட்டிங்கில் முன்வரிசையும், கடைசி வரிசையும் இருக்க, நடுவரிசை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது.

இதனால் மிக பலகீனமான அணியாகக் கணிக்கப்பட்டு தொடருக்குள் வந்த குஜராத் அணி, பத்து வெற்றி இருபது புள்ளிகளோடு முதல் அணியாக ப்ளேஆப் சுற்றுக்குள் நுழைந்ததோடு, முதல் அணியாக இறுதிபோட்டிக்குள்ளும் நுழைந்து அசத்தி இருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சில் முன்னே வந்து நின்று தலைமைத் தாங்கினார். துவக்க வீரராக சஹா, இறுதிக்கட்டத்தில் மில்லர், திவாட்டியா மூவரும் வேறொரு பரிணாமத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.

- Advertisement -

குஜராத் அணியின் இந்த திடீர் எழுச்சியில் ஆப்கன் வீரர் ரஷீத்கான் மிக முக்கியமானவர். பந்துவீச்சில் 15 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகளை எடுத்திருக்கும் இவர், பேட்டிங்கில் குஜராத்தின் பினிசராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். எட்டு இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள இவர் 91 ரன்களை அடித்துள்ளார். இதில் முக்கியமான விசயம் இவரது 206.82 என்ற ஸ்ட்ரைக் ரேட்தான். சென்னை, ஹைதராபாத் அணிகளோடு இவர் ஆடிய சூறாவளி ஆட்டத்தை அந்த அணிகளின் இரசிகர்கள் மறக்க சில ஆண்டுகள் ஆகலாம்!

வெற்றிக்கரமான வலக்கை லெக்-ஸ்பின்னரான இவர், சக லெக்-ஸ்பின்னர்களான இந்தியாவின் சாஹல், பிஷ்னோய் பற்றி தனது கருத்துகளைச் சமீபத்தில் தெரிவித்துள்ளார். சாஹலைப் பற்றி அவர் “சாஹல் இந்திய அணிக்கும் பெங்களூர் அணிக்கும் செயல்பட்டுள்ள விதம் மிகச்சிறப்பானது. அவர் நிச்சயம் சிறப்பான வீரர். பெங்களூரின் சிறிய மைதானத்தில் அவர் மிகவும் கடினமாகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்” என்று கூறினார்.

மேலும் பிஷ்னோய் பற்றி அவர் “பிஷ்னோய் ஒரு இளம் திறமைசாலி. நான் அவருடன் சிலமுறை பேசியிருக்கிறேன். அவரை நம்பி தொடர் வாய்ப்புகள் தந்தால், அவர் நிச்சயம் இந்திய அணியின் மிகப்பெரிய பந்துவீச்சாளராக வருவார். அதற்கான திறமை அவரிடம் இருக்கிறது” என்றும் கூறினார்!

- Advertisement -