குண்டர்தனத்தை கிரிக்கெட்டில் காட்ட வேண்டாம். எங்கள் அணியும் ஆபத்தில் சிக்கி இருக்கும்; விடமாட்டோம் பாகிஸ்தான் தலைவர் ரமீஸ் ராஜா!

0
155
Ramiz Raja

நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மிக முக்கியமான போட்டி ஒன்றில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வென்றால், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறும், அதே சமயத்தில் ஆப்கானிஸ்தான் வென்றால் இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருக்கும். இப்படியான சூழ்நிலை நிலவியதால் இந்தப் போட்டிக்கு மிகவும் முக்கியத்துவம் இருந்தது.

இதைத்தாண்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளுக்கு எதிர்பார்ப்பு உச்ச நிலையை அடைவதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று ரீதியாக காரணங்கள் இருப்பது போல, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிகளுக்கும் எதிர்பார்ப்பு உச்சநிலையை எட்ட இப்படியான காரணங்கள் இருக்கிறது. இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் போட்டியில் களத்தில் மட்டுமல்லாது வெளியிலும் ரசிகர்கள் மோதிக் கொள்வது வாடிக்கையான ஒன்றாக இருக்கிறது. உலக கோப்பையிலும் இப்படி இரு நாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதிய பொழுது, பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 129 ரன்களை எடுத்தது. இதையடுத்து களம் கண்ட பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் அணி மிகச் சிறப்பாக பந்து வீச்சில் கட்டுப்படுத்தியது. இந்த சூழலில் ஆட்டத்தின் 19வது ஓவரை வீசிய அகமது பரீத் பாகிஸ்தானின் ஆசிப் அலி விக்கெட்டை வீழ்த்தி, அவரது முகத்திற்கு நேரே கையை உயர்த்தி ஏதோ கூறி வெற்றியைக் கொண்டாடினார்.

இது ஆசிப் அலியைக் கோபப்படுத்த, அவர் திருப்பி பேட்டை உயர்த்தினார். இதனால் களத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டு பின்பு நடுவர்கள் மற்றும் வீரர்களால் சூழ்நிலை சரி செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் நதிம் ஷா கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் இந்திய அணிகள் இறுதிப் போட்டி வாய்ப்பில் இருந்து வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து மைதானத்தில் இரு நாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களை தாக்கியதாக தெரியவருகிறது. இதை கண்டித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும்போது “கிரிக்கெட்டில் குண்டர்களை அடையாளம் காட்டாதீர்கள். கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவே கூடாது. இதற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்புவோம். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். இதுகுறித்து ஐசிசிக்கு கடிதம் எழுதுவோம். பார்த்த காட்சிகள் மிகவும் மோசமாக இருந்தது. மேலும் இப்படி நடப்பது முதல் முறையும் அல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் ஒரு பகுதி. இது கடினமான போட்டி மற்றும் சிறந்த போட்டி. இதில் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உங்களால் இதை சரிவர செய்ய முடியாவிட்டால் நீங்கள் கிரிக்கெட்டராக வர முடியாது. நாங்கள் ஒரு விளையாட்டு தேசம். எங்களுக்கு இது குறித்து அக்கறை இருக்கிறது. இதை நாங்கள் ஐசிசி இடம் கடிதம் மூலம் தெரிவிப்போம். அவர்கள் எங்கள் ரசிகர்களைத் தாக்கினார்கள். எங்கள் அணி கூட ஆபத்தில் சிக்கி இருக்கலாம். எதுவும் நடந்திருக்கலாம். இந்த விஷயத்தில் நாங்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம்” என்று கூறியிருக்கிறார்.