துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் சென்ட்ரல் ஸோன் அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் அபாரமாக சதம் அடித்து அசத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள BCCI மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபி 2025 இறுதிப்போட்டியின் இரண்டாவது நாளில் சவுத் ஸோனுக்கு எதிராக ரஜத் பட்டிதார் பட்டையை கிளப்பினார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டனான இவர், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அபாரமான சதம் அடித்து போட்டியை சென்ட்ரல் ஸோனுக்கு சாதகமாக மாற்றினார்.இந்த தொடரில் பட்டிதார் அபாரமான ஃபார்மில் உள்ளார். காலிறுதியில் ஏற்கனவே ஒரு சதம் அடித்திருந்த அவர், மீண்டும் ஒரு முறை தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.
அவரது சதம் 112 பந்துகளில், 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் வந்தது. இது அவரது 15வது முதல் தர சதமாகும். அவருடைய ஆக்ரோஷமும், துல்லியமான ஷாட்-மேக்கிங்கும் இணைந்து சவுத் ஸோனின் பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் வைத்தது. சென்ட்ரல் ஸோனின் இன்னிங்ஸ், டேனிஷ் மலேவார் மற்றும் அக்ஷய் வாட்கர் இடையேயான அரைசதம் நல்ல அடித்தளத்தை தந்தது.
மலேவார் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு, பட்டிதார் யாஷ் ரத்தோட்டுடன் இணைந்தார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 201 பந்துகளில் 167 ரன்கள் குவித்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. ரத்தோட் நங்கூரமாக விளையாட, பட்டிதார் ஆக்ரோஷமான ஷாட்களுடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சென்ட்ரல் சோன் முன்னிலை:
.பட்டிதார் இறுதியாக குர்ஜப்னீத் சிங் பந்துவீச்சில் 115 பந்துகளில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதற்குள் அவர் சென்ட்ரல் ஸோனுக்கு வலுவான அடித்தளம் அமைத்திருந்தார். இதே போன்று ரத்தோட் 150 பந்துகளில் 116 ரன்கள் எட்டினார். சென்ட்ரல் ஸோனின் மொத்த ரன்கள் 300ஐ தாண்டி, முன்னிலை 200ஐ நெருங்கியது.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக மட்டும் கவனமுடன் விளையாடனும்.. பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சியாளர் தந்த எச்சரிக்கை
இந்த துலீப் டிராபியில் வெறும் நான்கு இன்னிங்ஸ்களில் 369 ரன்கள் எடுத்து, தொடரின் அதிக ரன்கள் குவித்தவராக பட்டிதார் உள்ளார். அவரது நிலையான செயல்பாடு, இந்திய டெஸ்ட் அணியில் அவரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பட்டிதார் 2024ல் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் 63 ரன்களும், ஒரு ஒருநாள் போட்டியில் 22 ரன்களும் எடுத்தார். அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், உள்நாட்டு கிரிக்கெட்டில் அவரது அபார ஆட்டம் மூலம் மீண்டும் டெஸ்ட் அணிக்கு கம்பேக் தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.