திருமணத்தை நிறுத்திவிட்டு பெங்களூர் அணிக்காக விளையாட வந்த ரஜத் பட்டிதர்

0
242
Rajat Patidar RCB

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் மிக முக்கியமான போட்டியான எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணியும் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியின் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. இந்த ஆட்டம் ஒரு ஹை-ஸ்கோரிங் திரில்லராக கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது!

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய, பெங்களூர் ஓபனர்களில் விராட்கோலி நிதானம் காட்ட, கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் கோல்டன் டக் அடித்தார். ஆனால் மூன்றாவது வீரராய் களமிறங்கிய 28 வயதான மத்திய பிரதேச வீரர் ரஜத் பட்டிதார் இடைவிடாது வெடி வெடித்ததுபோல் விளையாடி 12 பவுண்டரி, 7 சிக்ஸரோடு, 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, இரண்டாவது குவாலிபையரில் ராஜஸ்தான் அணியோடு மோத இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்!

- Advertisement -

2021ஆம் ஆண்டே ரஜத் பட்டிதார் பெங்களூர் அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார். அந்த வருடம் நான்கு ஆட்டங்கள் வாய்ப்பு பெற்ற இவர் 71 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்தக் காரணத்தினால் இவ்வாண்டு நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இவரை பெங்களூர் அணி வாங்கவில்லை. பெங்களூர் அணி மட்டுமல்லாது எந்த அணிகளும் வாங்வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெங்களூர் அணி இந் ஆண்டு இருபது இலட்சத்திற்கு வாங்கியிருந்த கர்நாடகாவின் விக்கெட் கீப்பர் மற்றும் இடக்கை சுழற்பந்து வீசும் பேட்ஸ்மேனான லுவ்னித் சிசோடியா பயிற்சியில் காயமடைய, பெங்களூர் அணி மீண்டும் ரஜத் பட்டிதாரை இருபது இலட்சத்திற்கு வாங்கிக்கொண்டது. தொடரின் ஆரம்பத்தில் பெங்களூர் அணியின் ஓபனராக களமிறக்கப்பட் அனுஜ் ராவத்தும், மூன்றாவது பேட்ஸ்மேனாய் களமிறங்கிய விராட்கோலியும் சொதப்பவே, விராட்கோலி ஓபனராக இவருக்கு பேட்டிங்கில் மூன்றாவது வரிசையில் இடம் கிடைக்க அசத்திவிட்டார். இதுவரை இந்த ஆண்டு 7 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 275 ரன்கள் அடித்திருக்கிறார்.

இவர் சதம் கண்ட ஆட்டத்திற்குப் பிறகுதான் இவர் சார்ந்த சுவாரசியமான விசயம் ஒன்று அவரது தந்தையாரால் தெரிய வந்துள்ளது. என்னவென்றால்; இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் இவர் விலைபோகாததால் இவருக்கு மே 25ஆம் தேதி திருமணம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் ஆர்.சி.பி அணி இவரைத் திரும்ப அழைக்க, திருமணத்தை நிறுத்திவிட்டு வந்து சாதித்திருக்கிறார். இவரது தந்தை இது குறித்து பேசும்பொழுது, குறைவான பத்திரிக்கைகள் அடித்து, சிறிய ஹோட்டல் முன்பதிவு செய்து, எளிமையாக நடத்த உள்ளதாகவும், ரஜத் பட்டிதார் ரஞ்சி டிராபியின் நாக்அவுட் சுற்றில் மத்தியபிரதேஷ் அணிக்காக விளையாட உள்ளதால், ஜூலை மாதம் தள்ளிவைக்கப்பட்ட திருமணம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்!

- Advertisement -