ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
1 ரன்னில் ராஜஸ்தான் தோல்வி
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசை அதிரடி பேட்ஸ்மேன் ஆன்ட்ரே ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்கம் விரைவில் ஆட்டம் இழந்தாலும் அணியின் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர் அடங்கும். இறுதி வரை நின்று முடிக்க வேண்டிய ஆட்டத்தில் எதிர்பாராதவிதமாக இறுதி கட்டத்தில் ஆட்டம் இழந்ததால் 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.
பேச தயக்கமாக உள்ளது
இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறும்போது ” கடைசி இரண்டு ஓவர் வரை நான் விளையாட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக 18 வது ஓவரில் அவுட் ஆனேன். அது என் தரப்பில் இருந்து ஒரு தவறான கணக்கீடானது. கடைசி 6 ஓவர்களில் சிறந்த வீரர்களை தேர்வு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதில் குறை சொல்வதற்கு என்று எதுவும் கிடையாது. நாங்கள் போட்டியை சிறப்பாக விளையாடி முடித்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க:வெறும் 1 ரன்னில் வெற்றி.. 95 ரன்.. 8 சிக்ஸ்.. ரியான் பராக்கின் போராட்டம் வீண்.. கம்பேக் கொடுத்த ரசல்.. த்ரில் வெற்றி பெற்ற கேகேஆர்
நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டிய போட்டி இது. ரசல் 10 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் வேகத்தை அதிகரித்த விதம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இது குறிப்பாக சிக்சர்கள் அடிக்கும் மைதானம். விக்கெட் கொஞ்சம் தந்திரமாக இருந்ததால் நான் அதிகமாக பவுண்டரிகள் அடிக்க திட்டமிட்டேன். நான் இதை சொல்லிக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தோல்வி அடைந்த பிறகு நேர்காணல் கொடுப்பதற்கு தயக்கமாக இருக்கிறது. நாங்கள் சிறப்பாக செயல்படாததால் அதன் விளைவு தற்போது பார்க்கிறோம்”என பேசி இருக்கிறார்.






