இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் புகழை பறைசாற்றும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் ஒரு ஸ்டாண்டுக்கு ரோகித் சர்மாவின் பெயர் சூட்டப்பட்டு மும்பை கிரிக்கெட் சங்கம் அவரை கௌரவப் படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ரோகித் சர்மா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ரோகித் குறித்து டிராவிட்
மும்பையைச் சேர்ந்த ரோஹித் சர்மா இந்திய உள்நாட்டு போட்டிகளில் விளையாட ஆரம்பித்து மெல்ல மெல்ல இந்திய அணியில் இடம் பிடித்து தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். அதற்குப் பின்னர் தொடக்க வரிசையில் நிலையான இடத்தை பிடித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதற்குப் பிறகு இந்திய அணியின் முழு நேர கேப்டன் ஆகவும் மாறினார். இரண்டு ஐசிசி கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதங்களை அடித்து மிகப்பெரிய சாதனையையும் படைத்திருக்கிறார்.
மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரோஹித் சர்மா குறித்து சில நகைச்சுவையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அந்த திசையில் அடிக்க வேண்டும்
இதுகுறித்து டிராவிட் விரிவாக கூறும்போது “ஹாய் ரோஹித், உங்கள் பெயரை அந்த மைதானத்தில் ஸ்டாண்டில் சூட்டப்பட்ட பிறகு அந்த திசையை நோக்கி அதிக சிக்ஸர்கள் அடிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். உலகிலேயே பெரிய மைதானங்களில் ஒன்றான வான்கடே மைதானத்தில் விளையாட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள்.
இதையும் படிங்க:17 வயசுல நாங்க செஞ்ச அதை நினைத்தால்.. கோலியை ஸ்டார் அந்தஸ்தில் என்னால் பார்க்க முடியாது – இசாந்த் சர்மா பேட்டி
அந்த ஸ்டாண்டுக்கு உங்க பெயர் வைப்பாங்கன்னு நீங்க கனவுல கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டீங்க. இப்போ நீங்க செஞ்சது மும்பைக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் நீங்கள் செய்த பங்களிப்பிற்கு ஒரு பொருத்தமான பரிசாகும். நீங்கள் உண்மையிலேயே அதற்கு தகுதி உள்ள நபர் தான். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இது ஒரு சிறந்த நாளாக அமைந்திருக்கும். இந்த மைதானத்தில் நீங்கள் விளையாடும் அனைத்து ஆட்டங்களிலும் அதிக சிக்ஸர்கள் அந்த ஸ்டாண்டில் அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மும்பையில் எனக்கு டிக்கெட் பற்றாக்குறை இருப்பதால் இனி யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என எனக்கு தெரியும். உங்கள் பெயரிலேயே தற்போது ஸ்டண்ட் இருப்பதால் உங்களை எளிதாக என்னால் தொடர்பு கொள்ள முடியும்” என டிராவிட் கலகலப்பாக பேசியிருக்கிறார்.