நேற்று நடைபெற்ற முடிந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் அதிரடியான ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வெற்றிக்கு காரணமாக இருந்த பிரப் சிம்ரன்சிங் மற்றும் நேகல் வதேரா ஆகியோர் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
பஞ்சாப் அணியின் ஆதிக்கம்
பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த ஐபிஎல் தொடர்களை விட இந்த ஆண்டு மிக வலுவான முறையில் இருக்கிறது. சரியான வீரர்களை வாங்கி அணியை வலுவாக கட்டமைத்ததோடு கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் ஆகியோரை பஞ்சாப் நிர்வாகம் நியமித்திருக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பஞ்சாப் அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுப்பதோடு, புதிய நம்பிக்கையும் பிறக்க வழிவகுத்துள்ளது. குஜராத் அணிக்கு எதிராக முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி, லக்னோ அடிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்திலும் 171 ரன்கள் இலக்கை 16.2 ஓவர்களிலேயே அடைந்து வெற்றி பெற்றது. வெற்றிக்கு காரணமாக இருந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் வதேரா ஆகியோர் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்த சில கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
பஞ்சாப் வீரர்கள் புகழாரம்
இதுகுறித்து நேகல் வதேரா கூறும்போது “நான் பணியாற்றிய பயிற்சியாளர்களில் ரிக்கி பாண்டிங் சிறந்த ஒருவர். அவர் வாயிலிருந்து எந்த ஒரு எதிர்மறையான பேச்சையும் நான் கேட்டதில்லை. அதுதான் அவரைப் பற்றிய சிறந்த விஷயம், அவர் எப்போதுமே நேர்மறையாக மட்டுமே பேசக்கூடியவர். ஒரு பயிற்சியாளர் உங்களுக்கு நேர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வழங்கும் போது நம்பிக்கை தானாகவே அதிகரிக்கும்” என்று போட்டிக்குப் பிறகு கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:எனக்கு சந்தேகமா இருக்கு.. பிட்ச் தயாரிப்பாளர் எங்க ஆளா இல்ல பஞ்சாப் ஆளானு தெரியல – லக்னோ ஆலோசகர் ஜாகிர் கான்
இது குறித்து பிரப்சிம்ரன்சிங் கூறும்போது ” ரிக்கி பாண்டிங் மாதிரியான வீரர்கள் எப்போதுமே ஜாம்பவான்கள். அவர் போன்ற வீரர்கள் பேசும் போது நேர்மறையான கருத்துக்களை மட்டுமே வழங்குவார்கள். நாங்கள் விளையாடும் போது எங்களை ஒரே மாதிரியான மனநிலையில் செல்ல சொல்கிறார்கள். எங்கள் ஆட்டத்தை ஆதரிக்க சொல்கிறார்கள் நான் செட் ஆகிவிட்டால் போட்டியை நின்று முடிக்க வேண்டும்” என்று அவர் கூறியிருக்கிறார்.






