நேற்று நடைபெற்ற ஐபிஎல் 13வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் ஆலோசகர் ஜாஹிர் கான் ஆடுகளம் தயாரித்த விதம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
லக்னோ அணி தோல்வி
லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக பூரன் 44 ரன்கள், ஆயுஸ் பதோனி 41 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியை பொறுத்தவரை அர்ஸ்தீப் சிங் 3 விக்கட்டுகள் கைப்பற்றினார்.
அடுத்து வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களம் இறங்கியது. லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் ஆடுகளம் தயாரிப்பு குறித்து ஜாகிர் கான் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். லக்னோ ஆடுகளம் சொந்த அணி ரசிகர்களுக்கு சாதகமாக இல்லை எனவும் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
எனக்கு அந்த சந்தேகம் இருந்தது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இது எங்களுக்கு ஒரு சொந்த மைதான ஆட்டம் என்பதால் அணிகள் ஐபிஎல்லில் சொந்த மைதானங்களில் விளையாடுவதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆடுகளம் எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது லக்னோ அணியின் ஆடுகள தயாரிப்பாளர் உண்மையில் இது ஒரு சொந்த மைதான ஆட்டமாக கருதவில்லை என்பது போல் தோன்றியது.
இதையும் படிங்க:எங்க பிளேயர்ஸ் கடுமையா உழைக்கிறாங்க.. ஆனா தோல்வியை தவிர்க்க இதை கவனிக்காம விட்டுட்டோம் – ரிஷப் பண்ட் பேட்டி
ஒருவேளை பஞ்சாப் ஆடுகள தயாரிப்பாளர் ஆடுகளத்தை பராமரித்தாரா என்பது போல கூட தோன்றியது. ஆனால் அவர் இங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். நாம் அதை கண்டுபிடிக்க வேண்டிய ஒன்றாகும்” என்று ஜாகிர் கான் கூறியிருக்கிறார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள லக்னோ அணிக்கு இது இரண்டாவது தோல்வியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் அந்த அணிக்கு முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளதால் சரியான அணியை கட்டமைப்பதில் லக்னோ அணி தடுமாறி வருவதும் குறிப்பிடத்தக்கது.






