லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரின் 13வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் லக்னோ மோதல்
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம் இந்த முறை ஓரளவு நன்றாக விளையாட மற்றொரு தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் தனது முதல் பந்திலேயே அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் மாரர்க்ரம் ஜோடி இரண்டாவது வீக்கத்துக்கு 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்த நிலையில் மார்க்ரம் 18 பந்துகளில் 28 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களமிறங்கிய கேப்டன் பண்ட் 2 ரன்னில் ஏமாற்றம் அளிக்க, ஆயுஷ் பதோனி 41 ரன்கள் குவித்து வெளியேறினார். பூரன் 33 பந்துகளில் 44 ரன்கள் குவிக்க, டேவிட் மில்லர் 19 ரன்கள் மற்றும் அப்துல் சமாத் இறுதி கட்டத்தில் 12 பந்துகளில் 27 ரன்கள் குவித்தனர். இதனால் லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பஞ்சாப் கிங்ஸ் சிறப்பான வெற்றி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இளம் வீரர் பிரின்ஸ் ஆர்யா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 44 பந்துகளில் 84 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய பிரப் சிம்ரன் சிங் 34 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 69 ரன்கள் குவித்து ஆயுஸ் பதோனியின் சிறப்பான கேட்ச்சால் வெளியேறினார்.
இதையும் படிங்க:2024ல் கேகேஆர் ஐபில் கோப்பையை வெல்ல.. கம்பீர் காரணம் அல்ல.. அந்த 2 பேருக்குதான் முக்கிய பங்கு – இந்திய முன்னாள் வீரர்
ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு முனையில் தனது கேப்டன் இன்னிங்ஸ் விளையாட, மறுமுனையில் களமிறங்கிய நெகல் வதேரா தனது அதிரடியை தொடர்ந்தார். 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பதேரா 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 43 ரன்கள் குவிக்க மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் 46 ரன்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பதிவு செய்ததோடு பஞ்சாப் அணியும் வெற்றி பெற வைத்தார். இதனால் இறுதியில் பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி பேட்டிங்கில் இந்திய வீரர்களை மட்டுமே களம் இறக்கியது குறிப்பிடத்தக்கது.






