நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
16 ரன் வித்தியாசத்தில் வெற்றி
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்த எளிதான இலக்கை கொல்கத்தா அணி மிக விரைவாக எட்டி பிடிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட யுஸ்வேந்திர சஹால் இக்கட்டான சமயத்தில் சிறப்பாக பந்து வீசி போட்டியை முழுவதுமாக பஞ்சாப் பக்கம் திருப்பினார். கேப்டன் ரகானே 17 ரன் மற்றும் ரகுவன்சி 37 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் இருவரையும் சகால் வீழ்த்தி ஆரம்பம் கொடுத்தார். அதற்குப் பிறகு ரிங்கு சிங் மற்றும் ரமண்தீப் சிங் ஆகியோரையும் விரைவாக வீழ்த்தி பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.
இதயத்துடிப்பு அதிகமாகி விட்டது
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறும் போது ” இந்த போட்டியில் இதயத்துடிப்பு எனக்கு அதிகமாக இருக்கலாம். 200க்கும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய 50 வயதில் இது எனக்கு தேவையில்லை. ஆட்டம் எவ்வளவு வேடிக்கையானது என்பதை இது உங்களுக்குச் சொல்கிறது. இதற்கு முந்தைய போட்டியில் நாங்கள் 245 ரன்கள் அடித்தும் தோல்வியடைந்தோம். சஹால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு போட்டி தொடங்குவதற்கு முன்பாக உடற் தகுதி சோதனை நடத்தினோம்.
இதையும் படிங்க:வெறும் 111 ரன்தான்.. ஆனா நான் டக்அவுட் ஆன பின்னாடி என் பவுலர்ஸ்கிட்ட இதைத்தான் சொன்னேன் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
அவருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டது. ஆனால் போட்டிக்கு முன்பாக ‘கோச் 100 சதவீதம் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன்’ என்று கூறினார். நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெறா விட்டாலும் கூட நாங்கள் போராடிய விதம் குறித்து பெருமைப்பட்டு இருப்பேன். இரண்டாவது பாதியில் எங்கள் போராட்ட குணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது” என்று ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார். இந்த போட்டியின் மூலமாக பஞ்சாப் அணி ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது.