தற்போது நடைபெற்று முடிந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் தோல்வியடைந்த விதம் குறித்து பஞ்சாபின் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பஞ்சாப் அணி தோல்வி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பாக விளையாடியதால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் சஞ்சு சாம்சன் 26 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் குவித்தார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழக்க கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை 10 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். கடந்த இரண்டு போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மிடில் வரிசை பேட்ஸ்மேன் வதேரா 62 ரன்கள் குவித்து ஆறுதல் அளித்தாலும் அது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியில் பஞ்சாப் அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
இந்த போட்டியின் தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறும் போது “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் 180 முதல் 185 ரன்கள் என்ற கணக்கில் தான் விளையாட வேண்டி வரும் என்று நினைத்தேன். இங்கு சேஸ் செய்வது நல்லது என்றாலும் எங்களால் திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. தொடரின் ஆரம்பத்திலேயே எங்களுக்கு ஒரு தோல்வி வந்தது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல ஆடுகளம், பந்து மெதுவாக நின்று வந்தது. எனவே நாங்கள் மெதுவாக பார்ட்னர்ஷிப்ளை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க:205 ரன்.. ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம்.. பவுலிங்கில் கலக்கிய ஆர்ச்சர்.. நெகல் வதேரா போராட்டம் வீண்.. 50 ரன்னில் ராஜஸ்தான் அபார வெற்றி
ஆனால் இந்த ஆட்டத்திலிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். இன்று பனியின் தாக்கம் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. நாங்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் செயல்பட்ட விதம் குறித்து வீடியோக்களை பார்க்க வேண்டும். நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் புதிய பேட்ஸ்மேன்களுக்கு உடனே செட் ஆவது என்பது எளிதான காரியம் அல்ல. நெகல் இந்த போட்டியில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அற்புதமாக விளையாடினார். எனவே இந்த தோல்வி முக்கியமானது என்று நினைக்கிறேன். இதிலிருந்து தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டிகளில் முன்னேறுவோம்” என்று கூறியிருக்கிறார்.






