டி20 உலக கோப்பை அரை இறுதியில் இந்த நான்கு அணிகள் தான் விளையாடும் என்று தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது உலகக்கோப்பை டி20 தொடரில் தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. இதில் தகுதி பெறும் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
அக்டோபர் 22ஆம் தேதி துவங்கும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு 23ஆம் தேதி முதல் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது என்பதால் மிகுந்த கவனத்துடன் பயிற்சி செய்து வருகிறது. 2021 உலகக்கோப்பை போல நடைபெற்று விடக்கூடாது என்கிற கவனம் இன்னும் கூடுதலாக இருக்கிறது.
மேலும் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் பலம்மிக்க அணியாக தெரிகிறது. அதேபோல் சமீப காலமாக தென்னாபிரிக்கா அணியின் செயல்பாடு அபாரமாக உள்ளது. பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வலுவான அணியாக தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. அது மட்டுமல்லது நியூசிலாந்து அணியையும் குறைத்து எடைபோட முடியாது. உலகக்கோப்பை தொடர்களில் அவர்கள் தொடர்ந்து மிகச்சிறப்பாக பங்களிப்பை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையில் எந்த நான்கு அணிகள் அரையிறுதி போட்டி வரை செல்லும் என்று தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறுகையில்,
“தயங்காமல் குரூப் இரண்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை கூறுவேன். அதேபோல் குரூப் 1ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும். இந்த நான்கு அணிகள் தான் எனது கணிப்பில் அரை இறுதி போட்டியில் பங்கேற்பர்.
அதேபோல் மிகுந்த தாக்குதலை ஏற்படுத்தக்கூடிய அணிகளாக நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இருக்கின்றன. பந்துவீச்சில் இரண்டு அணிகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்று தனது கணிப்பில் கூறியுள்ளார்.