பிரித்வி ஷா தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்துவிட்டார் என்று ரோஹித் ஷர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறியுள்ளார். பிரித்வி ஷா, 2016-17 சீசனில் 17 வயதில் ரஞ்சி டிராபி அறிமுகத்தில் சதம் அடித்து பிரபலமானார். 2018இல் இந்திய அண்டர்19 உலகக் கோப்பை வென்று தலைமை தாங்கினார்.
பின்னர் இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தார். 2018 இல் டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த பிரித்வி ஷா, தானேவில் பிறந்தவர். உச்ச நட்சத்திரமாக விளங்குவார் என பிரித்வி ஷா எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விரைவில் இடத்தை இழந்தார். 2021 முதல் சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை. பிரித்வி ஷா தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான கட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.
10 வயதிலிருந்து பார்க்கிறேன்:
ஏனெனில் முந்தைய ரஞ்சி டிராபி சீசனில் மோசமான ஃபார்மும் ஒழுங்கு பிரச்சினைகளாலும் நீக்கப்பட்ட பிறகு, வரவிருக்கும் உள்நாட்டு சீசனுக்கு முன்பு மும்பையை விட்டு வெளியேற முடிவு எடுத்தார். சையத் முஸ்தாக் அலி டிராபியில் சில போட்டிகளில் விளையாடினாலும், விஜய் ஹசாரே டிராபிக்கு அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
25 வயதான இவர், டெல்லி கேபிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட பிறகு 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் விற்கப்படாமல் போனார். இது குறித்து கருத்து தெரிவித்த ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட், “பிரித்வி ஷாவை அவரது சிறுவயதிலிருந்து, 10 வயதிலிருந்து நான் பார்த்துள்ளேன். “அவர் மிகவும் திறமையான வீரர். ஆனால் நான் சொன்னது போல், ஒவ்வொருவரின் பயணமும் தனிப்பட்டது, அவருக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.”
இந்திய அணி உச்சத்தில் உள்ளது:
“இருப்பினும், பிரித்வி ஷா மிகவும் திறமையான கிரிக்கெட்டர். துரதிர்ஷ்டவசமாக, அவர் தவறான பாதையில் சென்று தனது கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார். இப்போதும், அவர் பேட் செய்த விதத்தில் ஒரு பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். இப்போது நம்மிடம் சில உண்மையான சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். உதாரணமாக, வைபவ் சூர்யவன்ஷி பேட் செய்யும் விதம், அயுஷ் மாத்ரே பேட் செய்யும் விதம்.”
இதையும் படிங்க: சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முடிவு.. பின்வாங்கிய அஸ்வின்.. நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை
“இவர்கள் எதிர்கால கிரிக்கெட்டர்கள். அவர்கள் வரிசையில் தயாராகி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் கிட்டத்தட்ட உச்சத்தில் உள்ளது” என்று தினேஷ் லாட் கூறினார். இந்த சீசனில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டெடுக்க மஹாராஷ்டிராவுக்கு மாறியுள்ளார். ஜூன் மாதம் மும்பை கிரிக்கெட் அசோசியேஷனிடம் நோ ஆப்ஜெக்ஷன் சர்டிபிகேட் கோரினார், அது பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.






