நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில் லக்னோ அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி ஆட்டம் இழந்தது குறித்து லக்னோ பவுலர் பிரின்ஸ் யாதவ் சில சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் மிச்சல் மார்ஸ் 56 பந்துகளில் 116 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.
அவரை போல்ட் ஆக்கிய பிரின்ஸ் யாதவ் இந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதனால் லக்னோ அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்த சூழ்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய பிரின்ஸ் யாதவ் விராட் கோலி ஆட்டம் இழக்கச் செய்ய அவரது ஆலோசனை தான் தனக்கு உதவியதாக சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “கடைசி போட்டிக்குப் பிறகு நான் விராட் பையாவிடம் பேசினேன். அப்போது அவர் ஆடுகளத்தில் ஸ்விங் மற்றும் சீம் கிடைக்கும்போது சரியான லைன் அண்ட் லெந்தில் பந்துகளை தொடர்ந்து வீசு என்று கூறினார். அவரது அறிவுரையே அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு எனக்கு பெரிய உதவிகரமாக அமைந்தது” என்று பேசி இருக்கிறார்.
விராட் கோலி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சேசிங்கில் டக் அவுட் ஆகி வெளியேறுவது இது முதல் முறையாகும். ஆறு தோல்விகளுக்குப் பிறகு லக்னோ அணிக்கு இந்த வெற்றி ஆறுதலை கொடுத்திருக்கும்.






