நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை இந்திய அணி துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அணி நடப்பு சாம்பியன் டிராபி தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெற்றியுடன் தொடரை துவங்கி இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியை சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி தோற்று இருக்கிறது.
துபாய் மைதானத்தை பொருத்தவரையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சுழல் பந்துவீச்சுக்கு சாதகங்கள் கொஞ்சம் இருந்த போதிலும் கூட, எடுக்கப்பட்ட 10 விக்கெட்களில் எட்டு விக்கெட்டுகள் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களால் எடுக்கப்பட்டது. மேலும் நடந்து முடிந்த ஐஎல்டி டி20 லீக்கிலும் வேகப்பந்து வீச்சிக்கு சாதகமான சூழ்நிலைகள் காணப்பட்டது. எனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அர்ஸ்தீப் சிங் இடம் பெறுவர் வாய்ப்புள்ளதா? என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.
அதே சமயத்தில் இந்திய அணி மிடில் ஓவர்களில் விக்கெட் கைப்பற்ற முடியாமல் பங்களாதேஷ் அணியிடம் தடுமாறியது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக விக்கெட் கைப்பற்றாத குல்திப் யாதவ் இடத்தில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில் பலவீனமான பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற தங்களுடைய பிளேயிங் லெவனை மாற்ற இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவரும் விரும்ப மாட்டார்கள் என்று தெரிகிறது. குல்தீப் விக்கெட் கைப்பற்றாவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசி இருந்தார். எனவே அவரையே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் நம்புவார்கள் என்று தெரிகிறது.
இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்திய அணி கூடுதல் வேகப்பந்துவீச்சாளர் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்காது என்று நம்பப்படுகிறது. எனவே இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடிய பிளேயிங் லெவன் உடன் களமிறங்கும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : 1 பாக் வீரர் நினைத்தால் எங்களை வீழ்த்த முடியும்.. ரோஹித் டீம் இந்த விஷயத்தை உணரணும் – யுவராஜ் சிங் எச்சரிக்கை
இந்திய பிளேயிங் லெவன்: கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமி.