சூரியகுமார் தலைமையிலான இந்திய டி20 அலி இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி சிறப்பான முறையில் விளையாடி இறுதியில் மொத்தமாக சரிந்து தோற்றது. இந்த போட்டியில் தாங்கள் எந்த இடத்திலும் பீதி அடையவில்லை என இந்திய துணை கேப்டன் சுப்மன் கில் கூறியிருக்கிறார்.
இன்றைய போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வெல்ல இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்கள், ரிஷப் பண்ட் 33 பந்தில் 49 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இலங்கை அணியின் பதிரனா நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி மிகச் சிறப்பாக ரன்கள் சேர்த்து, 14 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. விக்கெட்டுகள் கைவசம் இருந்ததால் ஆறு ஓவர்களுக்கு 74 ரன்கள் எடுக்கக்கூடிய இலக்காக இருந்தது. இந்த நிலையில் அடுத்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்து 170 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் ஆனது.
இந்திய அணிக்கு இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து பவர் பிளேவில் 74 ரன்கள் எடுத்தார்கள். ஜெய்ஸ்வால் 21 பந்தில் 40 ரன்கள் எடுக்க, கில் 16 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பான துவக்கத்தை இந்திய அணிக்கு கொடுத்தது.
இந்த போட்டியில் வெற்றிக்குப் பின் பேசிய இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் “இந்த போட்டியில் இலங்கை அணி வலுவாக இருந்த பொழுது நாங்கள் எந்த இடத்திலும் பீதி அடைய கிடையாது. எங்களுக்கு மேற்கொண்டு ஒரு விக்கெட் மட்டும்தான் தேவை என்பது தெரியும். அதேபோல் ஜெயஸ்வால் உடன் பேட்டிங் செய்வது மிகவும் சிறப்பானது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்து விளையாடுகிறோம்.
இதையும் படிங்க : 75 ஓவர்கள் 376 ரன்கள்.. லாராவை முந்திய ஜோ ரூட்.. வாய்ப்பை வீணடித்த வெஸ்ட் இண்டீஸ்.. இங்கிலாந்து அபாரம்
எங்களுடைய ஸ்டைல் வித்தியாசமானது. அதே சமயத்தில் எங்களுடைய திட்டம் எளிமையானது. நாங்கள் கண்டிஷனை புரிந்து கொண்டு அதற்கேற்ற படி பந்துவீச்சாளர்களை எடுத்துக் கொள்கிறோம். மேலும் நாங்கள் இன்னிங்ஸை ஆரம்பிக்கும் பொழுது ஆடுகளும் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றபடி விளையாடுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.






