தற்போது இங்கிலாந்து அணி தங்களது சொந்த நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 282 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் பிரத்வெயிட் 61, ஜேசன் ஹோல்டர் 59, ஜோசுவா டி சில்வா 49 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிசை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 87 ரன்கள் எடுத்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து புது விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் அதிரடியாக விளையாடி 105 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்தார். ஆல் கவுண்டர் கிறிஸ் வோக்ஸ் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடி 78 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த இடத்தில் கிடைத்த வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் அணி வீணடித்து விட்டது.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 75.4 ஓவரில் 376 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4, ஜெய்டன் சீல்ஸ் 3, ஷமர் ஜோசப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ஓவர் களுக்கு 33 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. மேலும் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 61 ரன்கள் தற்பொழுது பின்தங்கி இருக்கிறது.
இதையும் படிங்க : 6 ரன் 3 விக்கெட்.. தொடரும் நடராஜன் மேஜிக்.. பிளே ஆப் சென்ற திருப்பூர்.. வெளியேறிய திருச்சி அணி.. டிஎன்பிஎல் 2024
இந்த போட்டிக்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஜோ ரூட் எட்டாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் ஏழாவது இடத்தில் 11 ஆயிரத்து 954 ரன்கள் எடுத்து ஏழாவது இடத்தில் இருந்த பிரைன் லாராவை முந்தி, எட்டாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.






