ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மெக் ஸ்வீனிக்கு பதிலாக 18 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியை விளையாட உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் அவருக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த தொடரின் நான்காவது போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இரண்டு அணிகளும் வெற்றிபெற தீவிரமான திட்டங்களுடன் தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் மெக்ஸ்வீனி இந்திய அணிக்கு எதிராக சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் அதே இந்திய அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த உள்நாட்டு வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது முதல் போட்டியில் விளையாட உள்ளார்.
இது அவருக்கு ஒரு முக்கிய போட்டியாக அமைய உள்ளது. தனது அறிமுகப் போட்டியே பலமான இந்திய அணிக்கு எதிராக இருப்பதால் பார்வையாளர்களின் கவனம் முழுவதும் தற்போது அவர் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். அதாவது எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடும் படி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அறிவுரை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஷாம் எப்போதும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார் என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இதற்கு முன்னர் நான் அவரிடம் சொன்னது, ஒரு 18 வயது இளைஞனாக நான் இருக்கும்போது எனக்கு அதிக வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று நம்பினேன். அந்த சமயத்தில் ஒரு போட்டி எனக்கு சிறப்பாக அமையவில்லை என்றால் அது என்னுடைய தவறு அல்ல, என்னை தேர்வு செய்த தேர்வாளர்களின் தவறாகும். உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும் போது நீங்கள் மிக இளமையாக இருக்கிறீர்கள்.
இதையும் படிங்க:மற்ற பேட்ஸ்மேன் பயப்படும்போது.. பும்ராவை டிராவிஸ் ஹெட் அடிக்க இதுதான் காரணம் – கிரேக் சேப்பல் கருத்து
எனவே இதைவிட ஒரு சிறப்பான தருணம் உங்களுக்கு அமையாது. எனவே இந்த தொடரை அனுபவித்து விளையாட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். நான் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமான போட்டியில் பேட்டிங் செய்யச் சென்றபோது எது குறித்தும் யோசிக்காமல் பந்தை மட்டுமே பார்த்து அடித்து விளையாட ஆரம்பித்தேன். டேல் ஸ்டைனின் ஒரு பந்தை அவரது தலைக்கு மேல் அடிக்க முயற்சித்தது எனக்கு நினைவிருக்கிறது. பிறகுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று யோசித்தேன். எனவே நீங்கள் விளையாடும் போட்டியில் பதட்டப்படாமல் போட்டியை அனுபவித்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






