பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் முதல் சுற்றிலேயே தனது அபார திறமையை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.
இறுதிப் போட்டி நடைபெற உள்ள தேதி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலுக்கான தகுதி சுற்று போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 32 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் குரூப் ஏ, குரூப் பி என்று இரண்டு பிரிவுகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டனர். இரண்டு கட்டமாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தமாக ஒரு வீரருக்கு ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். இந்தச் சுற்றில் தகுதி பெற ஒரு வீரர் 84 மீட்டர் தூரத்தில் ஈட்டி எறிய வேண்டும்.
இந்த சூழ்நிலையில் பி பிரிவில் பங்குபெற்ற இந்தியாவின் நடப்பு சாம்பியன் ஆன நீரஜ் சோப்ரா முதல் கட்டத்திலேயே 89.34 மீட்டர் தூரத்திற்கு எறிந்து சாதனை படைத்தார். இந்த சீசனின் மிகச்சிறந்த தூரமாக இது கணக்கிடப்பட்டதோடு சோப்ரா தற்போது இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருக்கிறார். இதன் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற சக இந்திய வீரரான ஜெனா 80 மீட்டர் மட்டுமே எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியானது இந்திய நேரப்படி ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு 11:55 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப் போட்டியானது தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும் இணையதளத்தில் ஜியோ சினிமா ஆப்பிலும் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சரித்திர சாதனை படைத்திருந்தார். தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற முதல் வீரர் என்ற சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்திருந்தார். தற்போது இந்தத் தொடரிலும் தங்கப்பதக்கம் உள்ள இவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மொத்தமாக இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவோடு சேர்ந்து 12 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுவரை இந்த ஒலிம்பித் தொடரில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மட்டுமே மூன்று வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள இந்திய அணி, இந்த போட்டியின் மூலம் தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பதக்கங்கள் பட்டியலில் இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களை வென்று 63 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. முதல் இடத்தில் அமெரிக்கா 24 தங்கம், 31 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தமாக 86 பக்கங்கள் வென்று முதலிடத்தில் இருக்கிறது.