பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆக விளங்குபவர் பாபர் அசாம். இவர் சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ஏபி டிவில்லியர்சின் யூடியூப் சேனலில் கலந்து கொண்டு தனது கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் தான் இதுவரை சந்தித்ததிலேயே கடினமான பந்துவீச்சாளரின் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் பாபர் அசாம். இவர் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விராட் கோலிக்கு அடுத்ததாக சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட இவர், விராட் கோலியை போலவே கவர் டிரைவ் ஷாட்கள் விளையாடுவதிலும் கைதேர்ந்தவர்.
பேட்டிங்கில் தலைசிறந்தவராக திகழ்ந்தாலும், கேப்டன் பொறுப்பில் சற்று பின்தங்கியவராக இருக்கிறார். கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை விட்டு விலகினார். அதற்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் மீண்டும் அழைக்கப்பட்டு டி20 உலக கோப்பை அணியில் கேப்டன் பொறுப்பை ஏற்று வழிநடத்துமாறு கூற, அதற்கு பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
இருப்பினும் இந்த முயற்சி பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்கவில்லை. அமெரிக்கா அணியோடு தோற்றது மட்டுமல்லாமல் இந்திய அணியுடன் வெற்றி பெற வேண்டிய போட்டியிலும் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பாபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். தற்போது அந்த சுவடுகள் மறந்து பாகிஸ்தான் அணி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது சமீபத்தில் பாபர் அசாம் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனான ஏபி டிவில்லியர்ஸ் அவர்களின் யூடியூப் சேனலில் கலந்து கொண்டு சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
இப்படியான சமயத்தில் ஒரு ரேபிட் ஃபயர் ரவுண்டில், இதுவரை சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்று பாபரிடம் கேட்க, அதற்கு பாபர் “பேட் கம்மின்ஸ்” என்று கூறினார். அதற்கு உடனே டிவில்லியர்சஸும் “ஆம், நான் இதை ஒப்புக்கொள்கிறேன். அவர் மிக நெருக்கமானவர். நான் சந்தித்த கடினமான பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் போற திசை கவலையா இருக்கு.. இது அவரை வேதனைப்படுத்தும் – ஆர்சிபி முன்னாள் கோச் சஞ்சய் பாங்கர் வருத்தம்
மேலும் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசிய பாபர் அசாம் “நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் கிரிக்கெட் குறித்து நான் நாளுக்கு நாள் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இது எங்கே செல்ல போகிறது என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நான் எனது விளையாட்டை விளையாடி என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். கிரிக்கெட்டை காதலித்து விளையாட விரும்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.